டெல், லெனோவா, போயிங்-9000 பேர் பணியிழப்பு!
டப்ளின்: கம்யூட்டர் உற்பத்தியில் உலகில் 2-ம் இடம் வகிக்கும் டெல் கம்ப்யூட்டர் நிறுவனம் 1900 பணியாளர்களை வியாழக்கிழமை நீக்கியுள்ளது.
பொருளாதார பெருமந்தம் உலகெங்கிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பல லட்சம் பணியாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். குறிப்பாக கம்ப்யூட்டர் துறையைச் சார்ந்தவர்கள் பெருமளவு வேலை இழந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இங்கிலாந்தில் 10 லட்சம் பேர் வரை வேலை இழப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு அயர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெல் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் தனது உற்பத்திப் பிரிவில் உள்ள 3000 பணியாளர்களில் 1900 பேரை நீக்கி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் இந்த நிறுவனம் தனது பணியாளர்களில் 8000 பேரை வீட்டுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
லெனோவாவில் 2500
சீநாவின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான லெனோவா தொடர் நஷ்டம் காரணமாக தனது மொத்த பணியாளர்களில் 11 சதவிகிதத்தை அதாவது 2500 பேரைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் வரும் 2010-க்குள் நஷ்டத்தை ஈடுகட்ட முடியும், 300 மில்லியன் டாலர்கள் பணத்தையும் சேமிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.
உலகின் கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனங்களில் 4-வது இடம் வகிக்கிறது லெனோவா என்பது குறிப்பிடத்தக்கது. உலகபப் பொருளாதார மந்தம் சீனாவையும் கடுமையாக பாதித்துள்ளதால் தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும், கடந்த இரு காலாண்டுகளில் விற்பனையில் அதி வேக சரிவும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளதால் இந்த வேலைக் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
போயிங்கில் 4500
விமான தயாரிப்புத் துறையில் முதல் நிலை வகிக்கும் போயிங் நிறுவனமும் வேலைக்குறைப்பை அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் தங்கள் நிறுவனத்தின் 4500 பணியாளர்கலை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் பலவீனமடைந்துவிட்ட இந்த சூழலில் வேலைக்குறைப்பை அதிகரித்து செலவைக் கட்டுப்படுத்துவது ஒன்றே எங்களுக்குத் தெரிந்த ஒரே வழி என்று போயிங் அறிவித்துள்ளது.
மேலும் கமர்ஷியல் விமானப் பிரிவில் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வேலையையும் துவங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications