எம்எல்ஏவிடமே பணம் கேட்ட 'எம்டன்'!
நெல்லை: எம்.எல்.ஏ அமைச்சராகப் போகிறார். எனவே உடனடியாக ரூ. ஆயிரத்தை அனுப்பி வையுங்கள் என்று ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு வீட்டுக்குப் போன் செய்த பலே ஆசாமியை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ அப்பாவு.
சில நாட்களுக்கு முன்னர் திருமங்கலம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்தபோது ஒரு மர்ம வாலிபர் செல்போனில் அவரது வீட்டிற்கு போன் செய்தார்.
அந்த நபர் நான் முதல்வர் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன், திருமங்கலம் தேர்தல் முடிந்தவுடன் அப்பாவு எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவுள்ளது.
அதற்கு ரூ.50 ஆயிரம் ரூபாயை நான் கூறும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று திருவனந்தபுரம் முகவரி ஒன்றை அளித்தார்.
குழம்பிப் போன அவரது குடும்பத்தினர் அப்பாவுக்கு போன் செய்து தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து அப்பாவு அந்த நபரின் செல்போனுக்குப் போன் போட்டுப் பேசினார்.
அப்போது அந்த நபர் மோசடி செய்ய திட்டமிட்டிருந்தது அவருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோரிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் செல்போனில் பேசிய மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நெல்லை டவுனை சேர்ந்த மகபூப்ஜான் மகன் ஷேக் மன்சூர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மன்சூர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications