களக்காடு அருகே காட்டு யானைகள் அட்டகாசம்
களக்காடு: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டிய விவசாயப் பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பயி்ர்களை நாசம் செய்து வருகின்றன.
களக்காடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள வனப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக இனப் பெருக்கத்திற்காக வநதுள்ளன.
இந்த யானை கூட்டங்கள் அவ்வபபோது வனப் பகுதியை ஓட்டி உள்ள தோட்டங்களில் புகுந்து மரங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக பனை மற்றும் தென்னை மரங்களை சாய்த்து குருந்து பகுதியை தின்று தீர்த்து வருகின்றன.
இந்நிலையில் களக்காடு அருகேயுள்ள இடையன்குளம் ஆயக்காரன்ஓடைக்கு மேற்கு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன.
அந்த தோட்ட உரிமையாளர் அசோக் குமார் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது 40க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பிடுங்கி வீசப்பட்டு கிடந்தன. மேலும் ஏராளமான மரவள்ளி கிழங்குகளும் நாசப்படுத்தப்பட்டிருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த களக்காடு ரேஞ்சர் கிருஷ்ணன் தலைமையில் வனவர் முனியாண்டி, வனக்காப்பாளர்கள் சோமன், பேச்சி்முத்து, ராமசாமி, வனக்காவலர்கள் பூல்பாண்டி, சாமிநாதன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப் பகுதிக்கு சென்று வெடி வைத்து யானை கூட்டங்களை விரட்டினர்.
இனப் பெருக்கத்திற்காக வந்த யானை கூட்டம் இன்னும் ஒரு மாத காலம் இந்த பகுதியில் நடமாடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications