ஆயிரம் திருமாவளவன்கள் வந்தாலும்..தங்கபாலு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் பலவீனமடையும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். ஒரு திருமாவளவன் அல்ல ஓராயிரம் திருமாவளவன்கள் வந்தாலும் காங்கிரசை பலவீனப்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கும், முதல்வசர் கருணாநிதிக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இலங்கை தமிழர்கள் காக்கப்படவும், அமைதியான சூழ்நிலை ஏற்படவும், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு அங்கமாக வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அதிபரிடமும், அமைச்சர்களிடமும் பல்வேறு மட்டங்களில் பேசி தெளிவாக்கியுள்ளார்.

ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்து வருவதாக இலங்கை அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். நிரந்தர தீர்வு ஏற்பட முயற்சி எடுத்து வருகிறோம்.

இலங்கை பிரச்சினை இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண வேண்டும். 50 ஆண்டுகளாக இந்த பிரச்சினை நிலவி வருகிறது. ஓரிரு நாளில் தீர்வு கண்டுவிட முடியாது. நேருவின் காலம் முதல் இன்று வரை காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு அனைத்து விதமான உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையும், இந்தியாவும் சேர்ந்து உருவாக்கிய திட்டம் தான் ராஜீவ் -ஜெயவர்த்தனே ஒப்பந்தம். இப்போது தான் இலங்கை அரசு வெளிப்படையாக அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றப் போவதாக கூறியிருக்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தெளிவாக இருக்கிறது. விடுதலைப் புலிகளை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம்.

புலிகளுக்கும், அரசுக்கும் இடையே நடந்து வரும் போரில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இதை தெளிவுபடுத்தி உள்ளோம். தீவிரவாதம் எங்கு இருந்தாலும் காங்கிரஸ் ஆதரிக்காது.

இலங்கை தமிழர்களை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இலங்கை பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது. போர் நிறுத்தம் வேண்டும் என்று கூறி வருகிறோம்.

இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதாக தவறாக பிரசாரம் செய்து வருகிறார்கள். சீனா, இஸ்ரேல், பாகிஸ்தான் நாடுகள் தான் ஆயுத உதவி செய்கின்றன. கம்யூனிஸ்ட் தோழர்கள் அதை மறைக்கிறார்கள்.

தமிழ் இன உணர்வில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. மத்திய அரசு முயற்சிக்காமல் இலங்கை பிரச்சினையில் தீர்வு ஏற்படாது.

தொடர்ந்து மத்திய அரசு அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இலங்கை பிரச்சினையை சொந்த லாபத்துக்காக தனிப்பட்ட கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. எந்த தனி நபரையும் முதன்மைப்படுத்துவதை விட அனைவரும் ஒரே அணியில் நிற்க முயற்சிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

தனிப்பட்ட முறையில் எந்த தலைவரும் எடுக்கும் முயற்சிகளால் மாற்றம் வரப்போவதில்லை. திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டம் தன்னிச்சையாக அவரே எடுத்த முடிவு என்று கருணாநிதி கூறியிருக்கிறார். திருமாவளவன் உண்ணாவிரதத்தை கைவிட்டு தமிழக அரசோடு இணைந்து மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இந்த பிரச்சினை மிகவும் ஜாக்கிரதையாக அனுக வேண்டியதாகும். உலக நடைமுறையில் எந்த ஒரு நாடும் மற்ற நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்த பிரச்சினையில் தமிழ்நாட்டின் அமைதியை கெடுத்து விடக் கூடாது. இலங்கை தமிழினத்தை காப்பாற்ற வெற்றுக் கூச்சல் போட்டால் காரியம் நடக்காது. தமிழக மக்களின் உணர்வை புரிந்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் பலவீனமடையும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். ஒரு திருமாவளவன் அல்ல ஓராயிரம் திருமாவளவன்கள் வந்தாலும் காங்கிரசை பலவீனப்படுத்த முடியாது.

காங்கிரஸ் ஆட்சி அமைவதை தடுக்கவும் முடியாது. தமிழ்நாட்டில் இலங்கை பிரச்சினையை மட்டும் வைத்து அரசியல் நடத்த முடியாது. மக்கள் அதை வேறுகோணத்தில் பார்க்கிறார்கள். எங்கள் கூட்டணி தேர்தல் நேரத்தில் மேலும் பலம் அடையும் என்றார் தங்கபாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+