சட்டசபை தீர்மானம் ஏமாற்றம் தருகிறது: ராமதாஸ்
காஞ்சீபுரம்: தமிழக சட்டசபையில் இலங்கை விவகாரம் தொடர்பாக இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஏமாற்றம் தருகிறது. இது போதாது. மத்திய அரசுக்கு தமிழக அரசு கெடு விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று, கடந்த ஏப்ரல் மாதம் முதலே நாங்கள் போராடி வருகிறோம். இதற்காக எங்கள் கட்சி எம்.பி.க்கள், வட இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.
எங்களது கோரிக்கையை ஏற்று, முதல்வரும் 2 முறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். டெல்லிக்கு அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்துச்சென்று, பிரதமரை சந்திக்க செய்தார். ஆனால் பலன் பூஜ்யம்தான்.
சட்ட சபையில் ஏதோ ஒரு முக்கிய தீர்மானம் வரப்போகிறது என்று உலக தமிழர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் இப்போது நிறைவேற்றப்பட்டு இருக்கும் தீர்மானம் சரியானது அல்ல. இது உலக தமிழர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.
சட்ட பேரவையில் இறுதி வேண்டுகோள் என்று இப்போது நிறைவேற்றப்பட்டு உள்ள தீர்மானத்தால், என்ன பலன் ஏற்பட போகிறது என்று தெரியவில்லை.
திமுக பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினை ..
அதன் பின்னரும் எந்த பலனும் ஏற்படவில்லை என்றால், தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வோம் என்று, முதல்வர் கூறி இருப்பது, தவறானது. ஈழத்தமிழர் பிரச்சினை என்பது தி.மு.க.வுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை.
இதில் தி.மு.க. செயற்குழுவை கூட்டி முடிவு எடுப்பது ஏற்புடையது அல்ல. இலங்கை பிரச்சினையில் அனைத்து தரப்பினரும் சம்பந்தப்பட்டு இருக்கிறோம். எனவே, அனைத்து கட்சி தலைவர்களையும் தாமதம் இன்றி கூட்டி முடிவு எடுக்க வேண்டும்.
திமுகவுக்கு தொடர்பு இல்லை ...
இலங்கை பிரச்சினைக்கும், தி.மு.க. ஆட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தி.மு.க. அரசு கவிழாது. வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றம் கூடும் போது, எங்கள் கட்சி எம்.பி.க்கள், இலங்கை பிரச்சினையை கடுமையாக எழுப்புவார்கள்.
உலக அளவில், பல தேசிய இனங்கள், தங்களுக்கு என்று சொந்த நாடுகளை உருவாக்கி இருக்கிறார்கள். உதாரணமாக பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் உருவானதை சொல்லலாம். அது போல், பாலஸ்தீனம், செக் குடியரசு, செர்பியா, குரோஷியா, மாசிடோனியா, கிழக்கு தைமூர் போன்ற நாடுகளை சொல்லலாம். இது போலத்தான் இலங்கை பிரச்சினையும்.
புலிகளை ஒதுக்கி விட முடியாது ...
இந்தியா-இலங்கை ஒப்பந்தம் மற்றும் நார்வே அமைதி பேச்சு வார்த்தை போன்றவற்றில் இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பங்கேற்றனர். எனவே விடுதலைப்புலிகளை சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதில் பாரத பிரதமருக்கு மனமில்லை. அவர் மனது வைத்து ஒரு போன் செய்தால் போதும். போர் நிறுத்தம் ஏற்படும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்தில், இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அதை கிடப்பில் போட்டு விட்டனர்.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் தேவை. இதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இறுதி கெடு விதிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications