ஈழப் போரை நிறுத்துங்கள், இல்லாவி்ட்டால் ஆள்வதை நிறுத்துங்கள்: சிபிஐ
சென்னை: ஈழத்தில் தமிழர் பிணங்கள் குவிவதற்கு முன் போரை நிறுத்துங்கள், இல்லையேல் ஆள்வதை நிறுத்துங்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா காங்கிரஸ் கட்சியை எச்சரித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள ராணுவத்தின் கையில் மாட்டியுள்ள தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்துதல் மற்றும் உடனடி போர் நிறுத்தம் போன்ற கோஷங்களை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன், சென்னை மாவட்ட செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் போர் ஒரு குரூரமான கட்டத்தை அடைந்திருக்கிறது. கிளிநொச்சி, ஆனையிறவு பகுதிகளை கைப்பற்றியதற்கு பின்னால் முல்லைத்தீவை சிறிலங்கா ராணுவம் முற்றுகையிட்டிருக்கிறது. பல லட்சம் தமிழ் மக்கள் ஒரு சின்ன நிலப்பகுதியில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில்தான், முப்பைடைகளையும் கொண்டு மும்முரமாகத் தாக்கி வருகிறது சிங்கள ராணுவம்.
இலங்கை போர் இந்த நிலையை எட்டியிருக்கிற போது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சும்மாயிருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் பிரச்சினையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அந்தத் திறன் அவர்களுக்கு உண்டு.
ஆனால் இலங்கை அரசுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இலங்கை போரில் இந்திய இராணுவத்தை சேர்ந்தவர்களே பங்கெடுத்து வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாது இந்திய கப்பற்படை சிறிலங்கா கடற்படைக்கு தேவையான இரகசிய தகவல்களை சொல்லி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கெல்லாம் ஆதாரங்களும் இப்போது கிடைத்துள்ளன.
தமிழகத்தை ஆளும் தி.மு.க., அங்கே நடைபெறுவது இனப்படுகொலை என்று தொடர்ந்து கூப்பாடு போடுகிறது. ஒப்பாரி வைக்கிறது. கூக்குரலிடுகிறது. சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மன்மோகன் அரசு சட்டமன்ற தீர்மானத்தை சட்டை செய்வதாக இல்லை.
கெஞ்சி வாழ்வதற்குப் பெயர் ஜனநாயகமா?
அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றும் தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை போட்டிருக்கின்றனர். என்ன, இறுதி வேண்டுகோள். கெஞ்சி வாழ்வதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல. உரிமையோடு வாழ்வதுதான் ஜனநாயகம்.
சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி உதவிகள் நிறுத்தவில்லையானால், நாம் அவர்கள் ஆள்வதை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
போராட்டம் தொடரும்!
முல்லைத்தீவு வீழ்வதற்கு முன்னால், அங்கு கிளஸ்டர் குண்டுகள் மழை போல் குவிவதற்கு முன்னால், மக்கள் பிணங்களாக குவிக்கப்படுவதற்கு முன்னால், இந்திய அரசு போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து போராடும். தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டமாக அது வளரும். இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அது நடைபெறும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications