நான் அழைத்ததால்தான் வருகிறார் பிரணாப் - ராஜபக்சே கூறுகிறார்

அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்குச் செல்கிறார். விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்துவதற்காக தான் செல்லவில்லை என்றும், புலிகள் மீது இந்திய அரசுக்கு ஒருபோதும் இரக்கம் பிறக்காது என்று அறிவித்துவிட்டே இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் பிரணாப்.
இந்நிலையில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய இறுதித் தீர்மானத்தை மதித்துதான் பிரணாப் இலங்கை செல்கிறார் என்று செய்திகள் பரப்பப்பட்டன.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் கருணாநிதியிடமும் இதே தகவலைத்தான் தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இதையே முதல்வரிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் புலிகளுடனான போரில் தாங்கள் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்து நடக்க வேண்டியவை குறித்து விவாதிக்கவுமே பிரணாப் முகர்ஜியை நாங்கள் இலங்கைக்கு அழைத்துள்ளோம் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
இதனை இலங்கை வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சற்று முன் வெளியாகியுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அறிக்கையில், இலங்கைக்கு பிரணாப் முகர்ஜி வருவது இந்திய அரசின் முடிவல்ல. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்றுதான் பிரணாப் முகர்ஜி வருகிறார்.
இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு மற்றும் பாரம்பரியத்தைக் காக்கவும், முன்னேற்றத் திட்டங்கள் குறித்துப் பேச்சு நடத்தவுமே அவர் இலங்கை வருகிறார்.
முகர்ஜியின் இந்தப் பயணம் விடுதலைப் புலிகளிடம் மாட்டிக் கொண்டுள்ள அப்பாவித் தமிழர்களைக் காக்க பெரிதும் உதவும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications