அரசியல் தலைவர் போல கோபாலசாமி செயல்படக் கூடாது: பரத்வாஜ்
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி அரசியல் தலைவர் போல செயல்படக் கூடாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் கூறியுள்ளார்.
இதன் மூலம் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என கோபாலசாமி அனுப்பியுள்ள பரிந்துரையை மத்திய அரசு ஏற்காது எனத் தெரிகிறது.
கோபாலசாமியின் பரிந்துரைக் கடிதம் குறித்து பரத்வாஜ் கூறுகையில், கோபாலசாமி தனது வேலை என்னவோ அதை மட்டும் செய்ய வேண்டும். அரசியல் தலைவர் போல செயல்படக் கூடாது.
நவீன் சாவ்லா குறித்த கோப்பு எனக்கு வந்துள்ளது. அதை நான் முழுமையாக பார்க்க வேண்டும்.
சாவ்லா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது முதலே தேர்தல் ஆணையத்திற்குள் பூசல் நிலவி வருகிறது.
ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற வேலையை மட்டும் கோபாலசாமி செய்தால் போதும். அரசியல் தலைவர் போல அவர் செயல்படக் கூடாது.
நவீன் சாவ்லா குறித்து என்ன முடிவு எடுத்தாலும் அதை தெரிவிப்போம்.
தேர்தல் ஆணையத்தின் தற்போதைய வேலை வாக்காளர் பட்டியலை தயார் செய்து வைப்பதுதான். தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க இது நேரமல்ல என்றார் பரத்வாஜ்.












Click it and Unblock the Notifications