நெல்லையில் லாலுவுக்கு கறுப்பு கொடி
நெல்லை: இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து நாளை திருச்செந்தூர் வரும் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு கறுப்பு கொடி காட்டுவது என நெல்லை வக்கீல்கள்
சங்கம் முடிவு செய்துள்ளது.
நெல்லை வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே
நடைபெற்று வரும் போரில் அப்பாவி தமிழர்கள் தினமும் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.
இதனை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, ரயில் மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க நெல்லை வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நேற்று மாலை நடந்தது. செயலாளர் சிவக்குமார் முன்னிலை
வகித்தார். கூட்டத்தில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறு்ப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தை
முற்றுகையிடுவது, நாளை ரயில்வே அமைச்சர் லாலுவுக்கு சங்க செயலாளர் சிவக்குமார் தலைமையில் கறுப்பு கொடி காட்டுவது, 9ம் தேதி தூத்துக்குடி வக்கீல்கள் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து முல்லைதீவுக்கு படகில் செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதை தொடர்ந்து 10ம் தேதி காலை பாளையங்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் சங்க தலைவர்
முத்துராமலிங்கம் தலைமையில் கறுப்பு கொடி போராட்டம், 12ம் தேதி பாளை ஜவஹர் திடலில் இயக்குனர் சீமான் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடத்துவது உள்பட பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications