பணவீக்கம் குறையுது: விலையோ ஏறுது!-ஏன்... ஏன்?

Subscribe to Oneindia Tamil

Street Vendor
'என்னய்யா இது... பணவீக்கம் குற்துவிட்டதென்று தினமும் செய்திகளாகப் போட்டுத் தாக்குகிறீர்கள்... ஆனால் விலைவாசி குறைந்தமாதிரி தெரியலையே...' என்று கேள்விகள் குவிகின்றன. இதற்கு பதில் சொல்ல வேண்டிய மத்திய நிதி அமைச்சகம் அமைதி காக்கிறது.

இன்னொரு பக்கம் ரிசர்வ் வங்கி ஏராளமான நிதிச் சலுகைகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை ரூ.5 லட்சம் கோடிக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் அறிவித்துள்ளார். பெட்ரோல் டீஸல் விலை குறைக்கப்பட்டது, நேற்று ரயில் கட்டணங்கள் கூட குறைந்துவிட்டன. ஆனால் அன்றாட விலைவாசி உச்சாணிக் கொம்பிலேயே உட்கார்ந்து கொண்டுள்ளது.

சரி... இருக்கட்டும். எதற்கும் 'பக்கத்து வீட்டைக்' கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வரலாம்!

சீனா... நமது அண்டை நாடு மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தில் நம்மை ரொம்பவே முந்திச் சென்று கொண்டிருக்கும் வல்லரசும் கூட.

பொருளாதார அணுகுமுறையில் நமக்கும் அவர்களுக்கும் இப்போது பெரிய வித்தியாசமில்லை. ஆனால் எதையும் திருந்தச் செய்கிறார்கள். அதுதான் மிகப் பெரிய வித்தியாசம். தனியுடைமை, சந்தைப் பொருளாதாரம் அனுமதிக்கப்பட்டுவிட்டாலும், விலை நிலைப்படுத்துதல் என்ற முக்கிய கருவியை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளது சீனா. அதன் விளைவு சீனாவின் பணவீக்கம், நுகர்வோர் விலைக்குறியீட்டெண்படி 4.9 சதவீதமாக உள்ளது.

நடப்பு நிதியாண்டு துவக்கத்தில் 7.1 சதவீதமாக இருந்த பணவீக்கத்தை இந்த ஆண்டு 4.8 சதவீதமாக குறைப்போம் என சீன அரசு உறுதி கூறியது. அதற்கேற்ப இப்போது 4.9 சதவீதமாக்கியுள்ளது. இன்னும் 1 மாத காலத்தில் 4.8-க்குக் கொண்டு வந்துவிடுவோம் என்கிறார்கள். அதாவது தாங்கள் திட்டங்களில் சொன்ன புள்ளிவிவரத்துக்கு தோராயமாக ஒரு கணக்கு காட்டினால் போதும் என்று அவர்கள் நினைக்கவில்லை. புள்ளிவிவரமும், நடைமுறை நிஜமும் ஒத்துப் போவதை ஒவ்வொரு காலகட்டத்திலும உறுதி செய்கிறார்கள். சந்தையை நிலைப்படுத்துவதில் முழுமையான அக்கறை காட்டுகிறார்கள்.

அதன் விளைவு...

2007-ம் ஆண்டைவிட, 2008-09 ஆண்டில் உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்த அளவு உயர்ந்துள்ளன, கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 2007-ல் 14 சதவீத வேகத்தில் உயர்ந்த உணவுப் பொருள்களின் விலைகள், இப்போது 10 சதவீதமாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் நான்கு சதவீதம் குறையும் என்கிறார்கள்.

உற்பத்தித் துறையிலும் நிறைவான போக்கு நிலவுகிறது. உணவுப் பொருள்களின் தேவையைவிட கூடுதலான உற்பத்தியை எட்டியுள்ளது சீனாவின் விவசாயத் துறை. இங்கு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவது உற்பத்திச் செலவால்தான்.

இந்த செலவை நுகர்வோர் தலையில்தான் உற்பத்தியாளர்கள் கட்டுவார்கள் என்பதைப் புரிந்து கொண்ட அரசு, எக்காரணம் கொண்டும் அந்தத் தவறு மட்டும் நடக்கக் கூடாது என்பதில் உறுதி காட்டுகிறது. அப்படி நடந்தால் அது மீண்டும் பணவீக்கத்துக்கே வழிவகுக்கும்.

இதற்காக உற்பத்தி செலவுக் குறைப்புக்கான மாற்று வழிகளை பரிந்துரைக்கத் துவங்கியுள்ளது சீனா. உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்ளவும் அரசு உறுதியளித்துள்ளது. இதன் விளைவு, இறைச்சி, சமையல் எண்ணெய் மற்றும் குறிப்பிட்ட உணவு தானியங்களின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது சீனாவில்.

இந்த கோடைக்குள் மேலும் 30 சதவீத விலைக் குறைப்புக்கு உறுதியளித்துள்ளது சீனா. அதற்கேற்ப, தற்போதுள்ளதைவிட இருமடங்கு விவசாய உற்பத்தி வரும் கோடையில் சாத்தியமாகும் என அந்நாட்டு விவசாயத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விலைகள் எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க சீனா என்னதான் செய்கிறது?

குறிப்பிட்ட இடைவெளிகளில் விலைக் கட்டுப்பாட்டு முறைகளை மாற்றிக் கொண்டே உள்ளது. இப்போது சீனாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் 'கார்ப்பரேட் காஸ்ட்' - நிறுவனச் செலவு அதிகரிப்பை மட்டும் வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டால், இந்த பொருளாதார மந்தத்திலிருந்தும் சீனா தப்பித்துவிடும். என்ன செய்யப் போகிறார்கள் சீனர்கள் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது, குறிப்பாக அமெரிக்கா.

பொருள்களின் விலைகள் குறையக் குறைய, உற்பத்தியாளர் கடன்களுக்கான வட்டிகள் குறைக்கப்படுகின்றன. அதிகரிக்கும் உற்பத்தி செலவை ஈடுகட்ட இது ஒரு சிறந்த வழி. மக்களுக்கு இதை விளக்க வேண்டிய அவசியம்கூட இல்லை அரசுக்கு. மிகச் சிறந்த பணவியல் கொள்கை வகுப்பாளர்கள் இருந்தால் மட்டுமே இந்தியா போன்ற நாடுகளில் இது சாத்தியமாகும்.

பணவீக்கம் ஏன் குறைகிறது... எப்போது அதிகரிக்கும்? ஏன் விலைகள் மட்டும் குறையவில்லை? போன்ற கேள்விகளுக்கு ஜோதிட திலகங்கள் மாதிரி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அரைகுறை பொருளாதார அறிஞர்களை நம்பிக் கொண்டிருந்தால், இந்தியப் பொருளாதாரம் இப்படி முரண்பாடுகளின் மூட்டையாகவே காட்சி தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+