போரை நிறுத்தக் கோரி தாம்பரம் - கன்னியாகுமரி இடையே மனித சங்கிலி

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
தாம்பரத்தில் போராட்டம் தொடங்கியது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், துணைச் செயலாளர் சி.மகேந்திரன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. அவைத்தலைவர் கண்ணப்பன், தலைமை நிலையச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் மல்லை சத்யா;
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் குமாரவேல், கலை இலக்கிய பிரிவு மாநில பார்வையாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார், துணைத் தலைவர் முருகன், முன்னாள் அரசவை கவிஞர் புலமை பித்தன்;
திரைப்பட இயக்குனர்கள் வி.சி.குகநாதன், தங்கர்பச்சான், நடிகர் மன்சூர் அலிகான், கவிஞர் அறிவுமதி, ஓவியர் புகழேந்தி, புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராஜன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கமும் இதில் கலந்து கொண்டார்.
இயக்கத்தில் இடம் பெற்ற கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த தொண்டர்கள், பெரும் திரளாக பங்கேற்றனர்.
கன்னியாகுமரி வரை நீண்டிருந்த இந்த பிரமாண்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தில், திருச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றிருந்தார்.
2 மணி நேரம் நடந்த இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தால் நீண்ட மனிதப் பாம்பு போல காணப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலை ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர்கள் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர். வெளிநாடுவாழ் தமிழர்கள் கனடா, மலேசியாவை சார்ந்த தமிழர்களும் சுற்றுலா வந்தபோது இந்த மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.
திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை மனித சங்கிலி அணிவகுப்பு நீண்டது.












Click it and Unblock the Notifications