'தேர்தல் ஜுரம்': ரூ.29,000 கோடி வரிச் சலுகை!

சில தினங்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வரிச் சலுகை ஏதும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இப்படி சலுகையற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ்காரர்களே புலம்பிக் கொண்டிருந்த சூழலில், தற்போது ரூ.29,000 கோடிக்கு புதிய வரிச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
உற்பத்தி வரி-சேவை வரி குறைப்பு:
செவ்வாய்க்கிழமை இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கோரும் தீர்மானத்தில் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உற்பத்தி வரி மற்றும் சேவை வரிகள் தலா 2 சதவீதம் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார். கட்டுமானத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு சிமென்ட் மீதான உற்பத்தி வரி 2 சதவீதம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சிறிய ரக கார்களுக்கு 8 சதவீதமும், பெரிய கார்களுக்கு 20 சதிவீதமும் இப்போது எக்ஸைஸ் வரி விதிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்படும் வரிகளிலும், சிகரெட் போன்ற ஆடம்பரப் பிரிவில் வரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் மருந்துகளின் விலைகளிலும் மாற்றமில்லை.
மாநில அரசுகளுக்கு தாராளம்:
மாநில அரசுகளின் பற்றாக்குறை விகிதம் 0.5 சதவீதம் அளவுக்கு கூடுதலாக இருக்கலாம் என்றும் மத்திய அரசு தாராளம் காட்டியுள்ளது.
இதனால் மாநில அரசுகளுக்கு ரூ.91,000 கோடி கூடுதல் நிதி கிடைக்கும், இந்த கூடுதல் நிதி ஆதாரத்தை அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளை பிரணாப் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநில அரசுகளின் பட்ஜெட் பற்றாக்குறை ஒட்டுமொத்த உற்பத்தி அளவில் 3 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பட்ஜெட் பற்றாக்குறை 2.99 சதவீதமாகும். இந்த அளவு தற்போது 3.5 சதவீதம் வரை இருக்க, இந்த வரிச் சலுகைகள் இடமளித்துள்ளன.
உற்பத்தி வரி 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதைப் போல சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கெனவே உற்பத்தி வரி 14 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது மேலும் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உற்பத்தி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ரூ.29,000 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்படும். பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு அறிவித்த மூன்றாவது சலுகைத் திட்டம் இது.












Click it and Unblock the Notifications