சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை போராட்டம் தொடரும்: வக்கீல்கள்
சென்னை: நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் பேரில், உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் வரும் வரை போராட்டம் தொடரும் என்று வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றக் கலவரம் தொடர்பாக உச்சநீதி்மன்றம் நியமித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தனது விசாரணையை 2 நாட்களுக்கு சென்னையில் மேற்கொண்டது.
நேற்றுடன் விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து வக்கீல்கள் மீண்டும் பணிக்குத் திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முடிவு தெரியும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் கூறுகையில், சூட்கேஸ் நிறைய போதுமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக விசாரணை கமிஷன் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறினார்.
ஐகோர்ட்டில் நடந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் அவர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார் என்று நம்புகிறோம். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் வரை கோர்ட்டை புறக்கணிப்போம். உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் கூறுகையில், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் 80 கோர்ட்டுகள் உள்ளன. ஏராளமான பொதுமக்கள் வந்து போகும் அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக கூடி கலவரம் நடக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது ஒட்டுமொத்த போலீசாரும் ஐகோர்ட் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்யப் போவதாக கூறியுள்ளார். நாங்கள் கோர்ட்டுகளுக்கு செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
வக்கீல்களை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகுதான் கோர்ட்டுக்கு செல்வோம் என்று கூறி விட்டோம். சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா சமர்ப்பிக்கும் அறிக்கை இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என்றார் பிரபாகரன்.
ஒரு வாரத்தில் அறிக்கை - ஸ்ரீகிருஷ்ணா
இதற்கிடையே, தனது விசாரணை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிப்பேன் என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
நேற்றுடன் தனது விசாரணையை ஸ்ரீகிருஷ்ணா முடித்துக் கொண்டார். நேற்றைய விசாரணையின்போது, உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி எஸ்.ஜெ.முகோபாத்தியா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் சந்தித்து நடந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்தனர்.
அதேபோல, அட்வகேட் ஜெனரல் ஜி.மாசிலாமணி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், மூத்த வக்கீல் காந்தி, தமிழக அரசு உள்துறை செயலாளர் எஸ்.மாலதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க செயலாளர் மோகனகிருஷ்ணன், வக்கீல்கள் சங்கர், காமராஜ், சிங்காரவேலன், பெண் வக்கீல் ஆர்.சுதா ஆகியோர் நடந்த சம்பவங்களைப் பற்றி எடுத்துக் கூறினார்கள்.
விசாரணையில், சி.பி.ஐ. இணை இயக்குனர் அசோக்குமார், துணை இயக்குனர் கந்தசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர். நேற்று காலை 9.30 மணிக்குத் தொடங்கிய விசாரணை மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.
பின்னர் கிளம்பிய ஸ்ரீகிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை ஐகோர்ட்டு சம்பவம் பற்றி விசாரித்து ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து நாட்கள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. சென்னையில் 2 நாட்கள் விசாரணை நடத்தினேன். வக்கீல்கள், போலீசார் மற்றும் பலர் அளித்த ஆவணங்களைப் பார்க்க வேண்டும்.
அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியாது. எப்படியானாலும் ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்துவிடுவேன். அது நாளையாகவோ அல்லது நாளை மறுநாளாகவோ இருக்கலாம். இதைத்தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என்றார்.
பின்னர் ஸ்ரீகிருஷ்ணா டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
செஷன்ஸ் கோர்ட் இன்று திறப்பு
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள சென்னை செஷன்ஸ் கோர்ட், குடும்ப நல கோர்ட், சிறுவழக்குகள் கோர்ட், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், தொழிலாளர் நல கோர்ட் ஆகியவை இன்று திறக்கப்படுகின்றன.
கலவரத்தில், இந்த கோர்ட்டுகள் சேதமடைந்தன. இந்த கோர்ட்டுகளில் சேதமடைந்த பகுதிகளை விசாரணை கமிஷன் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவும், சி.பி.ஐ.அதிகாரிகளும் நேரில் பார்த்தனர். இந்த கோர்ட்டுகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
சிபிஐ விசாரணை தொடங்கியது
இதற்கிடையே, வக்கீல்கள், போலீஸார் மோதல் குறித்து அறிவிக்கப்பட்ட சிபிஐ விசாரணை நேற்று முதல் தொடங்கியது.
வக்கீல்கள், போலீஸார் மோதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு விடத் தயாராக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதை ஏற்ற உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணை நேற்று முதல் தொடங்கியது.
மூத்த சி.பி.ஐ. அதிகாரி ராஜு தலைமையில் 45 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 15 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு நேற்று மதியம் 12 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர். கலவரத்தின் போது சேதமடைந்த பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். தீ வைத்து எரிக்கப்பட்ட போலீஸ் நிலையம், சிட்டி சிவில் கோர்ட், குடும்ப நல நீதிமன்றம், சிறுவழக்குகள் நீதிமன்றம், நூலகம், பார் கவுன்சில் அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார்கள்.
இந்த ஆய்வின் போது அவர்களுக்கு உதவியாக, தமிழக அரசின் தடய அறிவியல் துறையை சேர்ந்தவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக கூடுதல் இயக்குனர் விஜயகுமார் தலைமையில் 15 பேர் சி.பி.ஐ. அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.
அப்போது, சேதப்படுத்தப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் ஆராயப்பட்டன. சேதமடைந்த அனைத்து பொருட்களும் வீடியோ காமிராக்கள் மூலம் படம் எடுக்கப்பட்டன. மேலும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. மாலை 4 மணி வரை இந்த பணி நடைபெற்றது.
பிப்ரவரி 19ம் தேதியன்று நடந்த சம்பவத்தை மட்டும் சிபிஐ விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications