அரசியலைவிட்டு கருணாநிதி விலகுவதே நல்லது-ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துக் கொள்வது தான் கருணாநிதிக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது அறிக்கைக்கு பதில் தருவதாக நினைத்துக் கொண்டு, எந்த சம்பவத்தை எதனுடன் ஒப்பிடுவது என்று கூட தெரியாமல், தன் மனம் போன போக்கில் தனது அறியாமையை தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் கருணாநிதி.

19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையே வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல். இதே போன்று திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை. ஆனால், கருணாநிதியால் குறிப்பிடப்படும் மகாமகம் சம்பவம் (ஜெயலலிதாவும், சசிகலாவும் கும்பகோணம் மகாமகம் குளத்தில் புனித நீராடியபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் பலியானது) தற்செயலாக நடைபெற்ற ஒரு விபத்து.

உச்சநீதிமன்றம் கருணாநிதியை பதில் அளிக்கச் சொல்லவில்லை, காவல் துறையைத்தான் பதில் அளிக்கச் சொன்னது என்று தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார் கருணாநிதி. இதுபோன்ற கருணாநிதியின் அறிக்கையைப் பார்க்கும்போது, காவல் துறைக்கு பொறுப்பு வகிப்பவர் கருணாநிதியா அல்லது வேறு யாராவதா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ஜனநாயகத்தைப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், எதை எதையோ உளறியிருப்பதிலிருந்து, ஜனநாயகத்தைப் பற்றி பேச கருணாநிதியிடம் ஏதுமில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடைபிடிக்கின்ற மரபின் அடிப்படையிலும், இருக்கின்ற விதியின் அடிப்படையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்காமல், புதியதோர் விதி செய்வோம் என்று போகாத ஊருக்கு வழி தேடுவது தான் கருணாநிதியின் ஜனநாயகம் என்பதை அறியாதவர்கள் யாரும் இல்லை.

நான் ஏதோ உயர்ந்த அமைப்புகளை விமர்சித்து இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதிலிருந்து கருணாநிதி என்னுடைய அறிக்கையை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

நான் என்னுடைய அறிக்கையில் கருணாநிதி நினைக்கும் இடத்தில் சென்று முறையிடுவது' என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். தன்னுடைய சமீபத்திய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா' என்ற நாடகத்தின் மூலம் எப்படி முறையற்ற இடத்தில் கடிதங்களை கொடுப்பது என்பதை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் தான் கருணாநிதி. நான் எந்த உயரிய அமைப்பையும் விமர்சிக்கவில்லை.

முதுகுத் தண்டுவடத்தில் நடந்த அபாயகரமான அறுவை சிகிச்சைக்குப் பின்பும், அதில் தான் புத்துயிர் பெற்றுள்ளது பற்றியும் துளி இரக்கமும் இல்லாமல் நான் கேலி செய்திருப்பதாக கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

19ம் தேதி நடைபெற்ற காவல் துறையினரின் வன்முறை வெறியாட்ட சம்பவத்தில், தேவையில்லாமல் என் மீதும், அதிமுக மீதும் வீண்பழி சுமத்தியதால் தான் நான் அதற்கு பதிலடி கொடுத்தேன். கருணாநிதியை கேலி செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. கேலி செய்வதையும், கிண்டல் பண்ணுவதையும், நக்கலாகப் பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் கருணாநிதி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

கருணாநிதியின் அறிக்கைகளுக்கு எல்லாம் பதில் அளிக்காமல் மெளனம் காக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா என்று தெரியவில்லை!.

அதிமுக என்பது மிகப்பெரிய அரசியல் கட்சி. எனவே, கருணாநிதி அரசியல் ரீதியாக அறிக்கை கொடுப்பதால் அதற்கு தக்க பதில் கொடுப்பது தான் ஜனநாயகக் கடமை. நான் ஆற்றுகின்ற ஜனநாயகக் கடமையைத் தடுக்க நினைக்கும் கருணாநிதி எப்படிப்பட்ட ஜனநாயகவாதி என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது நீதிமன்றப் பணிகள் முடங்கியிருப்பதால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும், சீரழிந்துள்ள சட்டம்- ஒழுங்கை சீராக்கவும் நடவடிக்கை எடுக்காமல், என்னையும், அதிமுகவையும் சதா சர்வகாலமும் குறை கூறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பது கருணாநிதியின் இயலாமையையே காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில், அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துக் கொள்வதுதான் கருணாநிதிக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+