நான் நீதியின் பக்கம்தான் நிற்பேன் - கருணாநிதி
சென்னை: வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையிலான மோதலில் நான் யார் பக்கமும் இல்லை. நீதியின் பக்கம்தான் நான் இருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகள் பூங்குழலி. இவருக்கும், கோவையைச் சேர்ந்த பிரேம் ஆனந்துக்கும் இன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திருமணம் நடந்தது.
பேத்தி கல்யாணத்தையொட்டி தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் முதல்வர் கருணாநிதி வந்து கலந்து கொண்டார். சக்கர நாற்காலியில் அவர் அழைத்து வரப்பட்டார்.
அவரிடம் மணமணக்கள் ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் அமைச்சர் அன்பழகன் தாலியை எடுத்து கருணாநிதியி்டம் கொடுத்தார். அவர் அதைப் பெற்று மணமகனிடம் தந்தார். பின்னர் மணமகன் பிரேம் ஆனந்த், பூங்குழலி கழுத்தில் தாலியைக் கட்டினார்.
திருமண விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
ஏறத்தாழ 40 நாட்களுக்குப் பிறகு உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை இன்றைக்குப் பெற்றிருக்கிறேன்.
முதல்வர் வருவாரா? வருவாரா என்று இங்கே பேசிக் கொண்டதாக, நம்முடைய பேராசிரியர் காதர் மொய்தீன் சொன்னார். முதல்வர் வருவாரா என்று பேசிக் கொண்டார்களா? அல்லது முதல்வராக வருவாரா என்று பேசிக் கொண்டார்களா என்று எனக்குத் தெரியாது.
எப்படியும் சுயமரியாதை மணம் வீசுகின்ற இடத்தில் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கருணாநிதி இருப்பான் என்பதற்கு இது சான்று.
என்னுடைய மகன் தமிழரசு- மோகனா ஆகியோர் அன்புச்செல்வி பூங்குழலி- கோவை மாவட்டம் மத்தி ரெட்டிப் பாளையம், சின்ன முத்து மற்றும் முத்துசாமி ஆகியோரின் பேரனும், எம்.சி.பழனிசாமி-வசந்தி ஆகியோரின் அன்புச் செல்வனுமான பிரேம்ஆனந்த் இருவரும் இன்று வாழ்க்கைத் துணை என்கிற நலம் பெற்று நம்முடைய வாழ்த்துக்களையெல்லாம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த வாழ்த்துக்கள் வீண் போகாது. காரணம் மணமகனும், மணமகளும் எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என்னுடைய இளைய மகன், தமிழரசு-நீங்கள் எல்லாம் மிக அதிகமாக அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளா விட்டாலும், கழகத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதிலும் குறிப்பாக அடக்குமுறைகளை எதிர்த்து நடைபெறுகின்ற போராட்டமானாலும் அல்லது மொழியைக் காப்பாற்றுகின்ற போராட்டமானாலும் அல்லது உரிமைகளைக் கோருகின்ற போர் முனைகள் ஆனாலும் அவைகளில் எல்லாம் கழகத்தினர் சிறை புகுந்தால், அந்த சிறைக்குள்ளே 50 பேர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், கழகச் சார்புடையவர்கள் இருப்பார்களானால், தமிழரசு சிறைச் சாலைக்கு வெளியே இருந்து உள்ளேயிருக்கின்ற கழகத் தோழர்களுக்கு என்னென்ன வசதிகள் வாய்ப்புகள் வேண்டும் என்பதையெல்லாம் சட்டப் பூர்வமாக அறிந்து அவைகளை முறைப்படி தலைமைக் கழகத்திலே தெரிவித்து, அவற்றை அவர்களுக்கு வாங்கி உதவுகின்ற ஒரு பணியினை அவர்கள் ஆறு மாத காலம் சிறையிலே இருந்தாலும் அந்த ஆறு மாத காலமும் சிறைச்சாலையைச் சுற்றிச் சுற்றி வருகின்ற ஒரு மகன்தான், என்னுடைய இளைய மகன் மு.க.தமிழரசாகும்.
பேராசிரியர் இங்கே குறிப்பிட்டார்-உங்களுக்கு தமிழ் தெரியாது என்று சொன்னேன் என்று- மன்னிக்க வேண்டும், நான் அப்படிச் சொல்லவில்லை- உங்களுக்கு தமிழை தெரியாது என்றுதான் சொன்னேன். ஏனென்றால் நான் இந்தத் திருமணத்திற்கு வரவில்லையென்றால், தமிழின் கோபம் எந்த அளவிற்கு இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
யார் கோபித்தாலும் தாங்கிக் கொள்ளலாம், தமிழ் கோபித்தால் யாரும் தாங்கிக் கொள்ள முடியாது. வீட்டைப் பொறுத்து மாத்திரமல்ல, நாட்டைப் பொறுத்தும் தான் சொல்கிறேன். எனவேதான் தமிழுக்கு கோபத்தை உண்டாக்குகின்ற காரியத்தை யாரும் செய்யக்கூடாது என்பதை இந்தத் தமிழின் மூலமாக நான் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நம்முடைய ரவிக்குமார் எம்.எல்.ஏ. பேசும்போது ஒன்றைச் சொன்னார். இங்கேயும் கோரிக்கை வைக்கிறேன் என்று சொல்லி விட்டு அனைத்துச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் செய்திருக்கிறீர்கள். பெண்களும் அர்ச்சகராக ஆக வேண்டுமென்று சொன்னார். அவருக்கு ஏதோ சிறு சங்கடம் இருப்பதாக கருதுகிறேன்.
வீட்டிலே பெண்கள் அர்ச்சனை செய்வதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்களையெல்லாம் எப்படியாவது கோவிலுக்கு அனுப்பி விட வேண்டுமென்று அருமை நண்பர் ரவிக்குமார் அந்தக் கோரிக்கையை என்னிடம் வைத்துள்ளார். இதை நான் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. இன்று மகளிர் தினம். மார்ச் 8 மகளிர் தினம்-இந்த நாளில் நாம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்.
சொக்கத் தங்கம் சோனியா காந்தி ..
பல நேரங்களில் பாராளுமன்றத்தில், மகளிருக்கான இட ஒதுக்கீட்டிற்காக சட்டம் கொண்டு வர இந்தியாவினுடைய ஆட்சிக்கு இன்றைக்கு வழிகாட்டியாகவும், மன்மோகன் சிங்கின் அரசுக்கு அறிவுரை பகருபவராகவும், அதனை ஆக்க ரீதியாக நடத்திச் செல்பவருமாக இருக்கின்ற என்னுடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய சொக்கத் தங்கம் சோனியாகாந்திக்கு இந்த மண விழா மூலமாகவும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து அவர்களின் வழிகாட்டுதல்படியே அமைகின்ற ஆட்சியிலாவது நிச்சயமாக மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென்று மகளிர் தினத்தில் பூங்குழலிக்கும், பிரேம் ஆனந்துக்கும் இடையே நடைபெறுகிற இந்தத் திருமண விழாவிலே வேண்டுகோளாக விடுக்க விரும்புகின்றேன்.
கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, பூங்குழலி என்ற இந்தப் பெயர் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலிலே வந்தது தனக்கு நினைவுக்கு வந்ததாகச் சொன்னார். நான் அவரை மறுப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. மறுத்தாலும் குற்றம் இல்லை.
பூங்குழலி - அம்மன் பெயர்
இது புராணீக, ஷேத்திரம் என்று சொல்லப்படுகிற, பாடல் பெற்ற ஸ்தலமான எங்கள் கிராமம்-திருக்குவளையிலே உள்ள அம்மனின் பெயர்- அந்தக் காலத்திலேயே எவ்வளவு அழகான தமிழிலே வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு தமிழ்ப் பெயர்களையே வடமொழிப் பெயர்களாக மாற்றுவது தான் நாகரிகம் என்று கருதிக் கொண்டிருக்கின்ற ஒரு கேடு கெட்ட நிலை, தமிழகத்திலே வளர்ந்து வருகிறது. அதற்கு மாறாக நாம் எண்ணிப் பார்த்தால், அந்தக் காலத்திலேயே, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களிலே ஒன்றுதான் திருக்குவளையிலே இருக்கின்ற கோளிலிநாதர் கோவில்.
நான் தமிழுக்கு பெண் குழந்தை பிறந்த போது, பெயர் வைக்கச் சொன்ன நேரத்தில் நான் எண்ணிப் பார்த்த போது வண்டமரும் பூங்குழலி என்ற அந்தப் பெயர் என் நினைவுக்கு வந்தது. அதுதான் திருக்குளையில் உள்ள அம்மன் பெயர். அது அம்மன் பெயர் என்பதற்காக அல்ல அதிலே உள்ள தமிழ் பெயரைத்தான் இந்தப் பேத்திக்கு நான் வைத்தேன்.
அத்தகைய தமிழ் உணர்வு இன்றைக்குப் பட்டுப்போய் இருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் எல்லோரும் தமிழர்களாக தமிழ் மொழிக்கு சிறப்பு செய்பவர்களாக தமிழ் மொழியை வளர்ப்பவர்களாக மாறுவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகளிலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவமனையிலே நான் 40 நாள் இருந்தபோது அதுவும் எனக்கொரு அனுபவம்தான். ஆனால் இந்த அனுபவம் வேறு யாருக்கும் வரக்கூடாது. முதுகுத் தண்டிலே உயிருக்கு உலை வைக்கக் கூடிய அளவிற்கு ஒரு நோய், என்னைப் பிடித்தாட்டி, சில நாட்கள் அலட்சியமாக இருந்த காரணத்தினால், பின்னர் தகுந்த சிகிச்சையைத் தவிர இதற்கு வேறு வழியில்லை என்ற நிலையில் நம்முடைய போரூரிலே இருக்கின்ற ராமச்சந்திரா மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை நிபுணர் அவர்தான் அந்தத் துறைக்கு தலைவராகவும் இருக்கிறார்.
டாக்டர் மார்த்தாண்டம் அவர்கள் அவருடைய தலைமையில் 14 பேர் கொண்ட ஒரு மருத்துவக் குழு எனக்கு சிகிச்சை செய்து ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் ஏன் சில நேரங்களில் மாலை சில நேரங்களில் காலை என்று இப்படியெல்லாம் பொழுதுகள் மாறி மாறி வந்தாலும் அந்த நேரத்திலே நான் தாங்கிக் கொள்ள முடியாத வலியால் துடித்திருக்கிறேன். துவண்டிருக்கிறேன். ஒரு நாள் இரவு 2 மணிக்கு பயங்கரமான வலி ஏற்பட்டு, மருத்துவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு, கண்கலங்கி நின்ற போது நான் புரிந்து கொண்டு கட்சியின் தலைவருக்கெல்லாம் பேராசிரியர் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக வரச் சொல்லுங்கள். அவர்களையெல்லாம் நான் கடைசியாகப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கின்ற அளவிற்கு நிலைமை ஏற்பட்ட பிறகுதான் வேறு வழி தெரியாமல் யோசித்து மார்த்தாண்டமும், டாக்டர் தணிகாசலமும் டெல்லியிலிருந்து அரவிந்த் ஜெய்ஸ்வால் என்ற ஒரு அருமையான எலும்பு சிகிச்சை மருத்துவரை அழைத்த வந்தார்கள்.
அவர் வந்து எனக்கு சிகிச்சை அளித்து சிகிச்சை முக்கியமல்ல. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் எடுக்க வேண்டிய ஓய்வுதான் முக்கியம் என்று ஏறத்தாழ 3 மாத காலமாவது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
நானும் உங்களுடைய ஆதரவு இருக்குமென்ற என்ற எண்ணத்தோடு சம்மதித்திருக்கிறேன். இருந்தாலும் இடையிலே இன்றைக்கு இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள வேண்டிய அவசியம் எத்தகையது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை நான் உங்களிடத்தில் முன் கூட்டியே சொல்லியிருக்கிறேன்.
இன்றைக்கு தமிழ் சம்மந்தம் செய்திருக்கின்ற இந்தச் சம்மந்தி வீடு போலீஸ் துறையிலே பணி யாற்றியவருடைய இல்லம். போலீஸ் துறையோடு இப்போது நமக்கு சம்மந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சொன்னால், சில பேர் பார், பார் நாங்கள் சொன்னோம். இவருக்கு வக்கீல்களைப் பிடிக்காது. அதனால்தான் போலீஸ் துறையோடு சம்மந்தம் வைத்திருக்கிறார் என்று கூட நாளைக்கு சில பேர் பேச, எழுத வரக்கூடும். ஆனால் நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் துடித்து துவண்டு இனி வாழப் போகிறோமா என்ற கேள்விக்குறிக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் மருத்துவர்கள் எல்லாம் கை பிசைந்து நின்ற நேரத்திலேதான், சென்னை மாநகரத்திலே உயர் நீதிமன்றத்திலே ஒரு தகராறு ஏற்பட்டு-சில பேரால் சுப்பிரமணிய சுவாமி மீது முட்டைகள் வீசப்பட்டன. அதன் காரணமாக ஒரு வன்முறை கலவரம் ஏற்பட்டது. அது வளர்ந்து வக்கீல்கள், போலீசார் போராட்டமாக ஆகி, கடைசியாக உச்ச நீதிமன்றத்துக்கு சென்று கிருஷ்ணா கமிஷன் அறிக்கை என்ற முறையிலே அது வெளிவந்திருக்கிறது.
வழக்கறிஞர்கள் படித்தவர்கள், இன்றைக்கு போலீஸ்காரர்களாக இருப்பவர்களும் படித்து தேவையான பயிற்சிகளைப் பெற்று நல்ல ஒழுக்கத்திற்கான மதிப்புரைகள் பெற்று அதன் பிறகு அந்தப் பணிக்கு வந்தவர்கள், அதைப் போலவே நாட்டில் குற்றம் குறைகள் ஏற்பட்டால் களவுகள் கயமைச் செயல்கள் வன்முறைகள், நன்முறைகள் அல்லாதவை, திருட்டு, கொலை, கொள்ளை என்றெல்லாம் ஏற்பட்டால் அவைகளை கண்டு பிடிப்பது போலீஸ்காரர்களாகவும், கண்டு பிடித்தது உண்மைதானா அல்லவா என்று உண்மையான குற்றவாளியைத் தண்டிப்பதற்கு உதவுகின்றவர்களாக வக்கீல்களும் இருக்கின்ற காரணத்தால் இரண்டு பேரும் நம்மைப் பொறுத்தவரையில் இரண்டு கண்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
வக்கீல்கள்- போலீஸ் இரண்டு கண்கள்
எனவே இதிலே எந்தக்கண் நல்ல கண், எந்தக் கண் நல்ல கண் அல்ல என்றெல்லாம் நாம் ஆராய வேண்டியதில்லை. விமர்சிக்க வேண்டிய தில்லை. பொதுவாக இப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஒருவரை நியமித்து விசாரணை செய்யுங்கள் என்று நாமே கூடச் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லட்டும் என்று உச்ச நீதி மன்றத்திற்கே அந்த உரிமையைக் கொடுத்து, உச்ச நீதிமன்றம் கிருஷ்ணா கமிஷனை நியமித்து கிருஷ்ணா கமிஷன் இங்கே வந்து, சென்னையிலே மற்றும் பல இடங்களிலே விசாரணை செய்தது.
அது அறிவித்திருக்கின்ற தீர்ப்பில் அந்தப் பக்கத்திலும் குறை இருக்கிறது. இந்த பக்கத்திலும் குறை இருக்கிறது என்று சமதாக இரண்டு பேருடைய இரண்டு குழுவினருடைய தவறுகளையும் சுட்டிக் காட்டி இனிமேல் ஒற்றுமையாகச் செயல்படுங்கள் என்று அறிவுரையும் கூறியிருக்கின்ற போது அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வதுதான் நலம். அவர்களுக்கு மாத்திரமல்ல நாட்டிற்கே நலம்.
இந்த நலத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் ஒன்றைச் சொல்லுகிறேன்.
மருத்துவமனையிலே நான் துடித்துக் கொண்டிருந்த நேரத்திலே கூட இந்த கலவரம் உயர் நீதிமன்றத்திலே ஏற்பட்டது என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் மாலை 5 மணி அளவில் என்ன செய்வதென்று புரியாமல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் தொடர்பு கொள்ளலாம் என்று கருதி, அவரோடு தொலை பேசியிலே தொடர்பு கொள்ள இயலாது. ஆள் மூலமாக கடிதம் அனுப்பவும் இயலாது. அதற்கு நேரம் இல்லை, அதற்குள்ளாக என்ன ஏற்பட்டு விடுமோ, அப்படி ஏற்படாமல் அதையும் தடுக்க வேண்டுமென்பதற்காகத்தான் நான் மருத்துவமனையிலேயே இருந்து ஒரு பேக்ஸ் கடிதம் ஒன்றை அனுப்பினேன்.
உங்களைத் காண வேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்களேயானால் இந்த நிலையிலும் அப்போது எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களே ஆன நிலை இந்த நிலையிலும் ஆம்புலன்ஸ் வண்டியிலே ஏறிக் கொண்டு வந்து நான் உங்களைப் பார்க்கிறேன் என்று எழுதினேன். அதற்கு காரணம், இந்த நிகழ்ச்சிக்கு அரசு பொறுப்பு என்று சில பேர் சொன்னாலும் கூட அவர்கள் சொல்வதற்கு முன்பே, எனக்குதான் பொறுப்பு என்ற உண்மையை நானே உணர்ந்து கொண்டுதான், சமநிலையை ஏற்படுத்த வேண்டும், ஒரு சமரசரத்தை உருவாக்க வேண்டும், ஒரு சமாதானத்தை உண்டாக்க வேண்டும் என்ற நிலையிலே, இரு தரப்பினரையும் நான் அன்றைக்கு வேண்டிக் கொள்கிற முறையிலே தான் தலைமை நீதிபதியைக் காண விரும்பினேன்.
ஆனால் காணுகின்ற வாய்ப்பு ஏற்படவில்லை. அதற்கு பிறகு என்னென்னவோ நடந்து உச்ச நீதிமன்ற, கிருஷ்ணா கமிஷன் என்று வந்து, கிருஷ்ணா கமிஷன் வந்த பிறகும், அதை ஏற்பதா? ஏற்பதில்லையா? என்ற கேள்விக் குறியிலே வழக்கறிஞர்கள் இன்னமும் இருப்பது நாம் மிக மிக வருந்தக்கூடிய ஒன்று.
இங்கே ஒரு திருமணவிழாவிலே மகிழ்ச்சிகரமாக நடைபெறுகின்ற இந்த விழாவிலே இந்தப் பிரச்சினை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
நான் வழக்கறிஞர்களைக் காப்பாற்றுவது, போலீசாரைக் காப்பாற்றுவது என்ற எந்த பக்கத்திலே நிற்பது என்பதை விட்டு விட்டு இரண்டு பக்கமும் இல்லை, நான் நீதியின் பக்கம் நிற்பேன் அமைதியை உருவாக்க வேண்டும் என்கின்ற பக்கத்திலே நிற்பேன் என்றார் கருணாநிதி.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய்












Click it and Unblock the Notifications