முஷாரப்பை ஒரு பிடி பிடித்த மதானி!
டெல்லி: இந்திய முஸ்லீ்ம்கள் பிரச்சினை குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். உங்களது பாகிஸ்தான் அரசியலை இங்கு வைத்துக் கொள்ள வேண்டாம். உங்களது அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிடம் நேருக்கு நேர் கூறி அவரை அதிர்ச்சி அடைய வைத்தார், இந்திய உலமாக்கள் சபைத் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான மஹமூத் மதானி.
இந்தியா டுடே இதழ் நடத்தும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க முஷாரப் டெல்லி வந்துள்ளார். இந்த மாநாட்டில் முஷாரப்புடன் மதானியும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய முஷாரப், இந்திய முஸ்லீம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால்தான் அவர்கள் தீவிரவாதத்தில் இறங்குகின்றனர். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் மேலும் பல கார்கில்களை இரு நாடுகளும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த மதானி எழுந்து, நீங்களோ அல்லது உங்களது நாடோ இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை, அவசியமும் இல்லை.
உங்களது பாகிஸ்தான் அரசியலை இங்கிருந்து ஆரம்பிக்காதீர்கள். உங்களது பேச்சால் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களையும், பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்களையும் பிரித்து வைக்க நினைக்காதீர்கள்.
பாகிஸ்தான் மக்கள் தொகையை விட இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகம். அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்றார் கோபமாக.
அப்போது குறுக்கிட்ட முஷாரப், அது எனக்குத் தெரியுமே என்றார். பின்னர் தொடர்ந்த மதானி, அப்படியானால், தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் இந்திய முஸ்லீம்களுக்குத் தெரியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு உங்களது அறிவுரை தேவையில்லை என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் முஷாரப். சுதாரித்துக் கொண்டு அவர் பேசுகையில், நீங்கள் சொல்வது சரி என்றால் எனக்கு மகிழ்ச்சிதான். உங்களது நிலை நன்றாக இருக்கிறது, உங்களது பிரச்சினைகளை நீங்களே சரி செய்து கொள்ள முடியும் என்றால் எனக்கு மகிழ்ச்சிதான்.
உங்களது நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்பது உண்மையானால் உங்களை விட நான்தான் அதிக மகிழ்ச்சி அடைவேன் என்றார் முஷாரப்.
ஆனாலும் விடாத மதானி, நீங்கள் பாகிஸ்தானை பல காலம் ஆண்டுள்ளீர்கள். இரு நாடுகளின் உளவுப் பிரிவுகளும் (ஐ.எஸ்.ஐ, ரா) தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக கூறியுள்ளீர்கள். இதன் மூலம் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதத்தை தூண்டி வருவதை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள்.
எங்களது பக்கம் குறித்துத் தெரியாது. ஆனால் உங்கள் பக்கமிருந்துதான் (ஐ.எஸ்.ஐ) தீவிரவாதம் தூண்டி விடப்படுகிறது என்பதை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள் என்றார் தடாலடியாக.
இதைக் கேட்டு முகம் வெளிறிப் போனார் முஷாரப்.
மூக்கறுபட்ட முஷாரப்:
அதே போல இந்தியா வந்த முஷாரப்பை மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. டெல்லியில் தங்கியிருந்த முஷாரப், ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேச விரும்பினார்.
ஆனால் மூவரும் முஷரப்பை சந்திக்க மறுத்துவிட்டனர்.
அதே போல டெல்லியில் 4 இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்த முஷரப் திட்டமிட்டிருந்தார். அதற்கும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.












Click it and Unblock the Notifications