வக்கீல்கள் இல்லை - உறவினர்கள் மூலம் ஜாமீனில் வந்த 500 கைதிகள்
சென்னை: ஜாமீன் எடுக்க வேண்டிய வக்கீல்களே போராட்டத்தில் குதித்திருப்பதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ள 1500 கைதிகளில் 500 பேர் தங்களது உறவினர்களை வைத்து ஜாமீனுக்கு விண்ணப்பித்து வெளியே வந்து விட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஏராளமான பேர் பல்வேறு குற்றங்களைச் செய்து அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1500 பேர் ஜாமீனுக்கு முயற்சித்தபோது வக்கீல்கள் போராட்டத்தில் குதித்து விட்டதால் ஜாமீனில் வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சிறைக்குள் புழுங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் உறவினர்களை வைத்தோ நேரடியாக கோர்ட்டில் விண்ணப்பித்து ஜாமீன் பெறலாம் என்ற தகவல் இவர்களுக்குக் கிடைத்தது.
இதையடுத்து இவர்கள் அனைவரும் ஜாமீனுக்கு முயற்சிக்க ஆரம்பித்துள்ளனர். இதில் இதுவரை 500 பேருக்கு ஜாமீன் கிடைத்து வெளியேயும் வந்து விட்டனராம். இவர்களில் பலர் பெண்கள்.
இதில், சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து மட்டும் இதுவரை 300 பேர் வெளியேறியுள்ளனர். மீதமுள்ளவர்களும் விரைவில் வெளியேறி விடுவார்கள் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வக்கீல்கள் போராட்டம் காரணமாக சிறு சிறு குற்ற வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமீன் தர நீதிமன்றமும் சம்மதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications