அய்யா வழி பக்தர்களை குறி வைக்கும் அரசியல் தலைவர்கள்
நாகர்கோவில்: தென் தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு நோக்கு அரசியல் தலைவர்களின் கவனம் திரும்பியுள்ளது. இங்கு வந்தால் வெற்றி நிச்சயம் என்ற சென்டிமென்ட் ஒரு பக்கம், இருக்க அய்யாவழி பக்தர்களின் வாக்கு வங்கியையும் அவர்கள் குறி வைத்தே இங்கு வரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடு மற்றும் பிரசார பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்த போதிலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று ஒரு சென்டிமெண்டை கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் அரசியல் தலைவர்கள் குமரி மாவட்ட அய்யா வழி தலைமைப் பதிக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் பரவலாக அய்யா வழி பக்தர்கள் உள்ளனர். குமரி மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அய்யா வழி பக்தர்கள் உள்ளனர்.
கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட அய்யா வைகுண்ட சாமி தலைமை பதி அமைந்துள்ள சாமிதோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமானோர் உள்ளனர்.
இந்த அய்யா வழி பக்தர்களின் வாக்கு வங்கியை கணக்கில் கொண்டே அரசியல்வாதிகள் பார்வை சாமிதோப்பு பக்கம் திரும்பியுள்ளது என்ற கருத்து நிலவுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், உண்மை காரணம் வேறாக உள்ளது.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அப்பதவியை ஏற்கும் முன் குமரி மாவட்டம் வந்தபோது சாமி தோப்பு பதிக்கு சென்று தரிசனம் செய்தார். அதன்பிறகே அவர் பிரதமரானார். எனவே இந்த பதியில் தரிசனம் செய்தால் அத்வானி பிரதமராவார் என்ற செண்டிமெண்ட் காரணமாக அவரை இங்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் சாமி தோப்பு வந்து தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுடன் சரத்குமார் கூட்டணி ஏற்பட பிள்ளையார் சூழி போட்ட இடமே குமரி மாவட்டத்திலுள்ள சாமி தோப்பு அய்யா வைகுண்டரின் ஆலயம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வர உள்ளதாகவும், அவரும் குமரி அருகேயுள்ள துவாரகாபதி அய்யா பதிக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இமயம் முதல் குமரி வரை என்ற கோஷம் மாறி குமரி முதல் இமயம் வரையுள்ள தொகுதிகளை பாஜக பிடித்து மத்தியில் ஆட்சி அமைத்திட இங்கிருந்து பிரசாரத்தை அத்வானி தொடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications
