நாளை ஜெயலலிதாவுடன் ராமதாஸ் சந்திப்பு?

தற்போது தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தங்களது கட்சி போட்டியிடப் போகும் தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடைசியாக தெரிந்த தகவலின்படி பாமக, புதுச்சேரி, ஆரணி, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், தர்மபுரம், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. இதுதவிர ஒரு ராஜ்யசபா சீட்டையும் பாமகவுக்கு அதிமுக தருகிறது.
திமுக கூட்டணியில் பாமக இல்லை என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டதால், இன்று அல்லது நாளை மத்திய அமைச்சர் பதவிகளை அன்புமணி ராமதாஸும், வேலுவும் ராஜினாமா செய்யவுள்ளனர் என்கிறார்கள்.
நாளை காலை 11 மணிக்கு சென்னை அருகே உள்ள வானகரத்தில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கூட்டணிக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. இதையடுத்து டாக்டர் ராமதாஸ், தனது கட்சியின் முடிவை செய்தியாளர்களுக்கு அறிவிப்பார். அதன் பின்னர் அவர் போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்திப்பார் என பாமக வட்டாரம் கூறுகிறது.
இதைத் தடுக்கும் முயற்சிகளி்ல் காங்கிரஸ் ஈடுபட்டாலும் திமுக தரப்பு அவ்வளவாக இதில் ஆர்வம் காட்டவில்லை. போனால் போகட்டும் என்ற முடிவில் உள்ளது.












Click it and Unblock the Notifications