என்னை விலைக்கு வாங்க முடியாது: யாருடனும் கூட்டணி இல்லை-விஜயகாந்த்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து இன்று தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் விஜயகாந்த். கன்னியாகுமரி தொகுதி தேமுதிக வேட்பாளர் ஆஸ்டினை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது விஜயகாந்த் பேசுகையில், என்னை யாரும் பேரம் பேசி விலைக்கு வாங்கி விட முடியாது. 3 சீட், நான்கு சீட்களுக்கு நான் அலையவில்லை. அதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. பீகாரில் ஒரு தேசிய கட்சிக்கு 3 சீட்தான் கொடுத்துள்ளனர்.
தேசிய கட்சிகளை நம்பி இப்போது மாநிலக் கட்சிகள் இல்லை. மாநில கட்சிகளை நம்பித்தான் தேசிய கட்சிகள் உள்ளன.
மக்களையும், தெய்வத்தையும் நம்பித்தான் தேமுதிக தனது முதல் லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. இன்று முதல் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்யவுள்ளேன்.
ஆஸ்டின் நல்லவர், மக்களை நேசிக்கக் கூடியவர். ஏற்கனவே நாகர்கோவில் தொகுதி லோக்சபா உறுப்பினராக இருந்தவர். அவரை நிறுத்தியுள்ளேன்.
தமிழர்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதை முதல்வர் கருணாநிதியும் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என கூறி வருகிறார்கள். ஆனால் இலங்கையில் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காக்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரணாப் முகர்ஜி கொழும்பு போனார். ஆனால் அந்த பயணத்தால் எந்தப் பயனும் இல்லை.
தமிழர்கள் செத்து மடிந்தபிறகு, சமாதானம் கிடைப்பதாலோ, அமைதி உண்டாகுவதாலோ பயன் இல்லை.
இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் மாறி, மாறி அறிக்கை என்ற பெயரில் தங்களது தவறுகளை ஒப்புக் கொள்கிறார்கள். நான் மெளனமாக இருப்பதாகவும், யோசித்துக்கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள். நான் எப்போதும் மெளனம் சாதித்தது கிடையாது.
மக்கள் மற்றும் இளைஞர்களின் செல்வாக்குதான் என்னுடைய வளர்ச்சி. மடியில் கனம் இருந்தால்தான் பயம் இருக்கும். ஆனால் என் மடியில் கனம் இல்லை. பேரத்துக்கு பணியவில்லை என்கிறார்கள். 4, 5 சீட்டுகள் வாங்குவதற்கா நாங்கள் கட்சியை ஆரம்பித்தோம்.
மக்களை நம்பி தேமுதிக முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இங்குள்ள மாநில கட்சிகள், காங்கிரஸ், பாஜக என 2 தேசிய கட்சிகளும் மாறி, மாறி கூட்டணி வைத்துள்ளார்கள். அப்படி கூட்டணி வைத்துவிட்டு தமிழகத்துக்கு என்ன செய்தார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை சானலில் இதுவரை தண்ணீர் வந்ததில்லை. தண்ணீருக்கு கூட காசு கேட்கிறார்கள். ஒருமுறை எனக்கும் சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். நான் உங்களுக்காக குரல் கொடுக்க வந்துள்ளேன். சொந்த பந்தங்களுக்கு பதவி வாங்கிக் கொடுக்க நினைக்கவில்லை.
உங்களுக்கு குரல் கொடுக்கும் எனக்கு ஓட்டுப்போடுங்கள். விலைவாசி தாறுமாறாக ஏறி வருகிறது. எனது திருமண மண்டபம் இடிப்பு முதல் நேற்றுவரை எனக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.
நான் எந்த மிரட்டலையும் கண்டு பயப்படமாட்டேன். நான் உங்களை நம்புகிறேன். தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் என்ன செய்தார்கள் என்று எண்ணி பார்க்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் தேமுதிகவினருக்கு எந்தெந்தப் பகுதி மக்கள் எவ்வளவு வாக்களித்துள்ளார்கள், மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை நானே நேரில் ஆய்வு செய்வேன்.
அப்போது வாக்குகள் குறைவாக இருக்கும் பகுதிகளில் மாவட்ட நிர்வாகிகளை கேட்காமலேயே நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்படுவார்கள். ஆகையால் இன்று முதலே நிர்வாகிகள் சரியாக பணியாற்ற வேண்டும்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக சேராது. தனித்தே தேர்தலை சந்திப்போம்.
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக ஆஸ்டினை நிறுத்தியுள்ளேன். ஆஸ்டின் மக்களை நேசிக்க கூடியவர். ஏற்கனவே எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருந்து உங்களுக்காக போராடி உள்ளார்.
கடந்த முறை ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று கூறினேன். அப்போது என்னை கிண்டல் அடித்தார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளிடம் நேராக சென்று பொருட்களை கொள்முதல் செய்வதாக கூறி உள்ளனர்.
நான் தேர்தல் அறிக்கை விடும்போது கிண்டல் செய்தவர்கள், அதை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள். இந்த முறை எனக்கு வாய்ப்பு தாருங்கள். என்னிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதை நான் கண்டிப்பாக செயல்படுத்துவேன்.
நான் சூட்கேஸ் வாங்கி சம்பாதித்திருந்தால் கோடீஸ்வரானாகி இருப்பேன்.
நமது வேட்பாளர் ஆஸ்டினுக்கு என்ன சின்னம் என்று கூறி இருப்பேன். ஆனால் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. நாளை அதற்கான தீர்ப்பு வழங்கப்படும். அதன் பிறகு சின்னம் அறிவிக்கப்படும் என்றார் விஜய்காந்த்.
களியக்காவிளையில் பேசிய விஜயகாந்த், அங்கு திரண்டிருந்த மக்களிடம் தனித்து போட்டியிட வேண்டுமா? கூட்டணி அமைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
அப்போது தனித்து போட்டியிட வேண்டும் என பதில் வந்தது. அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டினார்.
நாளை நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications