ஜெ. வை எப்படியெல்லாம் விமர்சித்தார் ராமதாஸ் - பட்டியலிடும் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க. தலைவியைப் பற்றி, 2001-ம் ஆண்டு நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவிலே டாக்டர் ராமதாஸ் என்ன பேசினார் என்பதை பழைய ஏடுகளைப் புரட்டி அவரே பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக, திமுக மீது பல குறைகளை அள்ளி வீசியது. இது குறித்து தமிழக முதல்வர் அளித்துள்ள கேள்வி- பதில் அறிக்கை:

மாறி மாறிப் பேசுவது ராமதாஸ்தான்...

கேள்வி: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பொதுக்குழுவிலே பேசும்போது, 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 31 இடங்களில் இடம் கிடைத்து போட்டியிட்டதாகவும், 13 இடங்களில் திட்டமிட்டு அவர்களை நீங்கள்தான் தோற்கடித்து விட்டதைப் போலவும் பேசியிருக்கிறாரே?

பதில்: தி.மு.க.வை விட்டு போகும்போதும் எங்களையும் - அ.தி.மு.க.வை விட்டு விலகும்போதும் மாறி, மாறி தாக்குவதும், குறை சொல்வதும் அவருடைய வாடிக்கை. தற்போது எங்களை விட்டு விலகும்போது 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாங்கள்தான் திட்டமிட்டு தோற்கடித்ததைப் போல பேசுகிறார்.

2001-ம் ஆண்டு அ.தி.மு.க.வை விட்டு விலகியபோது- 14.7.2001 அன்று தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க.வின் பொதுக்குழுவில் நிறைவேற்றிய முதல் தீர்மானத்திலே- "தேர்தல் கூட்டணி ஏற்பட்ட பிறகு, எந்த கூட்டணி தலைவரிடமும் கலந்து பேசாமல் - தோழமை கட்சிகளுக்கு வாய்ப்புள்ள 141 தொகுதிகளையும், தன்னிச்சையாக பத்திரிகைகளில் அறிவித்துவிட்டு - பா.ம.க.வுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும், கட்சி வேண்டிக்கொண்ட தொகுதிகளையும் கொடுக்காமல் தோற்கடிக்க வேண்டுமென்று - மிகக் கடினமான 27 தொகுதிகளை ஒதுக்கி, அவைகளிலும் பா.ம.க. தோற்க வேண்டுமென்று ஜெயலலிதா, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களை அறிவுறுத்தினார்''- என்றெல்லாம் குறிப்பிட்டு அ.தி.மு.க.வை குற்றஞ் சாட்டியவர்தான் டாக்டர் ராமதாஸ்.

அந்த தீர்மானத்திலே அது மாத்திரமல்ல- அதுவரை கூட்டணித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவிற்கு எவ்வாறு நன்றி காட்டினார் என்பதையும் பாருங்கள்!

"டாக்டர் அய்யாவிற்கு நன்றி கூடச் சொல்லாமல், பதவியேற்பு விழாவிற்கு முறையாக அழைக்காமல், நேரில் பார்த்து வாழ்த்து சொல்ல இரண்டு நாட்கள் டாக்டர் அய்யா காத்திருந்தும் உதாசீனப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மந்திரிகள் பதவியேற்பு விழாவிற்கு டாக்டர் அய்யா ராஜ்பவனுக்கு சென்றபோது அங்கே கவர்னர் உட்கார சொல்லியும், ஜெயலலிதா உட்கார சொல்லாமல் அவமானப்படுத்தி, அவரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது வீட்டுக்கு வரச் சொல்லாமல், கோட்டைக்கு வரச்சொல்லி ஒரு மணி நேரத்துக்கு மேல் காக்க வைத்த, ஜெயலலிதாவின் ஆணவம், அட்டூழியம், பழி வாங்கும் போக்கு, கர்வம், வக்கிரபுத்தி, அவமானப்படுத்துதல் ஆகிய குணங்களைக் கொண்டு, எங்கள் நிறுவனத் தலைவர், சுயமரியாதைத் தலைவர் டாக்டர் அய்யாவின் மனம் புண்படும்படியாக கொச்சைப்படுத்திய ஜெயலலிதாவை இந்த பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது''

ஜெயலலிதாவிற்கு அப்போது எத்தகைய புகழ் மாலைகள் சூட்டப்பட்டன என்பதை நினைத்து, இப்போது நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்!

கேள்வி: டாக்டர் ராமதாஸ் 27.3.2009 அன்று அளித்த பேட்டியில் அவர்களை போயஸ் தோட்டத்திற்குத் தள்ளிவிட்டது தி.மு.க.தான் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: 2001-ம் ஆண்டு, போயஸ் தோட்டம் அவர்களை தள்ளிவிட்டபோது என்ன சொன்னார்கள் தெரியுமா? ஜெயலலிதாவின் சூழ்ச்சி, நயவஞ்சக நடவடிக்கைகளை தாங்கிக் கொண்டு சுய மரியாதை, தன்மானம் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது சாத்தியப்படாது என்பதால் அந்த கூட்டணியில் இருந்து விலகியதாக தீர்மானமே நிறைவேற்றினார்கள்.

இப்போது அம்மையாரின் சூழ்ச்சி, நயவஞ்சக நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்களோ என்னவோ? அதுமாத்திரமல்ல; 25.7.2001 அன்று டாக்டர் ராமதாஸ் அன்றைய பிரதமர் வாஜ்பாயை டெல்லியில் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தபோது கொடுத்த ஆங்கில அறிக்கையில், "சூது நிறைந்த, அவசரபுத்தியுள்ள, ஜெயலலிதாவின் நடவடிக்கை தான் பா.ம.க. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததற்கு காரணம்'' என்று சாட்டிய அதே குற்றச்சாட்டைத்தான் தற்போது மீண்டும் சொல்லியிருக்கிறார்.

மன்னிப்பு கேட்க தயார் ...

கேள்வி: பா.ம.க.வின் முடிவுக்கு காரணம், அந்த கட்சியின் ஒவ்வொரு தொண்டனும் தி.மு.க.வால், அமைச்சர்களால், தொண்டர்களால் பெரிய அளவில் காயப்பட்டதுதான் என்று டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறாரே?

பதில்: அவர் சொல்வது உண்மையென்றால், பா.ம.க. தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள நான் தயாராக உள்ளேன். பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இருபதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரிடம் நான் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டிருக்கிறேனா என்பதை அவர்களே கூறட்டும். ஆனால் தற்போது டாக்டர் போய்ச் சேர்ந்திருக்கின்ற அ.தி.மு.க. தலைவியைப் பற்றி, 2001-ம் ஆண்டு நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவிலே இதே டாக்டர் என்ன பேசினார் என்பதை பழைய ஏடுகளைப் புரட்டி அவரே பார்த்து தெரிந்து கொள்ளட்டும். அவருக்கு சிரமம் இல்லாமல் நானே அதனைத் தேடியெடுத்து இதோ தந்துள்ளேன். என் பேச்சில் அவருக்கு இன்னமும் நம்பிக்கை இருக்குமானால், படித்து அவரே தெரிந்து கொள்ளட்டும்.

இதோ டாக்டர் ராமதாசின் பேச்சு. "நான் அன்பு சகோதரி என்று மனதார அழைத்த ஜெயலலிதா என்னை கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தியதை எல்லாம் இங்கு எடுத்து கூறினார். இது இங்குள்ள அனைவருக்கும் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. ஆனால் அந்த அம்மையார் அவமானப்படுத்தாத தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா? தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ யாரும் இல்லை. ராஜீவ்காந்தியை, நரசிம்மராவை, கவர்னர் சென்னா ரெட்டியை கேவலப்படுத்தினார்.

வாஜ்பாய், அத்வானியை அவமானப்படுத்தினார். தலைவாழை இலை போட்டு, தமிழ்நாட்டு உணவு வகைகளை எல்லாம் பரிமாறி விருந்து வைத்து, கூட்டு சேர்ந்துவிட்டு, 13 மாதத்தில் ஆட்சியைக் கவிழ்த்தார். இவரைச் சந்திக்க வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜஸ்வந்த்சிங் ஆகியோரை அவமானப்படுத்தினார். தமிழகத்தில் இவருக்கு உயிர்பிச்சை கொடுத்து, வழிகாட்டிய எம்.ஜி.ஆருடன் இருந்த தலைவர்களை எல்லாம் அவமானப்படுத்தி வெளியேற்றினார்.

அண்டர்வேர் கூட போட விடாமல் ...

தமிழகத்தின் மூத்த தலைவரை, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை அசிங்கப்படுத்தி அண்டர்வேர் கூட போட முடியாதபடி கைது செய்ததை அறிந்து நாமெல்லாம் வேதனைப்பட்டோம். ஜெயலலிதாவின் இந்த கொடுங்கோன்மை தர்பாரை நாடே அறியும். இன்னும் 4 மாதத்தில் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியுமா என்ற நிலையிலும் கூட, ஆணவம், அகங்காரம் இருக்கிறது என்றால் இன்னும் அவர் என்ன செய்வார் என்று தமிழக மக்களே அஞ்சுகிறார்கள்.

காரியம் ஆக வேண்டுமானால் எதுவும் செய்வார், காரியம் முடிந்து விட்டால் தூக்கிப்போட்டு விடுவார். 28 நாள் சிறையில் இருந்துவிட்டு வந்தவருடன், அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, இப்படி ஒரு பெண்ணா என்று தமிழகமே வெறுத்தபோது, வாழப்பாடி மூலம் தூதுக்கு மேல் தூதுவிட்ட பிறகு -நாம் கூட்டு சேர்ந்ததால் புதுவை உள்பட 40 தொகுதியில் 30-ல் வெற்றி கிடைத்தது. அந்த அளவுக்கு அரசியலில் அவருக்கு நாம்தான் பிச்சை போட்டுள்ளோமே தவிர அவர் நமக்கு ஒன்றும் தரவில்லை''.

டாக்டர் ராமதாஸ், அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியபோது சாட்டியுள்ள இந்த குற்றச்சாட்டு அளவிற்கு நம்மீது கூறவில்லை என்பதை நினைத்து நாம் மன நிறைவு கொள்ளலாம்.

கேள்வி: மத்திய ஆட்சியில் பா.ம.க. ஐந்தாண்டு காலமும் பங்கேற்று அமைச்சர் பதவியையும் அனுபவித்துவிட்டு- தற்போது இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு உதாசீனப்படுத்திவிட்டதாகவும், தமிழர்களை மதிக்கவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

பதில்: இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எந்த அளவிற்கு செயல்பட்டது என்பதை அவருடைய புதல்வரே, அமைச்சராக இருந்த அளவில் நன்றாக உணர்வார். ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட பிரதமர் இலங்கைப் பிரச்சினை பற்றிய பல செய்திகளை எனக்கு கடிதம் மூலமாக எழுதியிருப்பதை ஏடுகளிலேயே பார்த்தோம். எனவே மத்திய அரசை இந்த அளவிற்கு குற்றஞ்சாட்டக் கூடாது என்பதுதான் என் கருத்து.

இருவருக்கும் ஒத்த கருத்து இல்லை..

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. ஒத்த கருத்துடையதா என்று டாக்டர் ராமதாசிடம் செய்தியாளர் கேட்டதற்கு, இருவரின் கருத்தும் ஒத்த கருத்து தான் என்று பதில் சொல்லியிருக்கிறாரே?

பதில்: தமிழ் ஈழம் வேண்டும் என்பது டாக்டர் ராமதாசின் கருத்து. தனி மாகாணம் அமைய வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கருத்து. பிரபாகரனை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டுமென்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.

பிரபாகரனை ஆதரிக்க வேண்டுமென்பது டாக்டர் ராமதாசின் கருத்து. "ராஜபக்சே விடுதலைப்புலிகளைத்தான் எதிர்த்து போரிடுகிறார்- இலங்கை தமிழர்களை அல்ல''- என்று சென்ற மாதம் அறிக்கை விட்டவர் ஜெயலலிதா. இப்படியிருக்க எவ்வாறு இருவரின் கருத்து ஒத்த கருத்தாக இருக்க முடியும் என்று கருணாநிதி கேட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+