For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது-மாயாவதி அதிரடி

By Sridhar L
Google Oneindia Tamil News

Varun Gandhi
பிலிபித்: பிலி்பித் நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது அங்கு பெரும் வன்முறை மூளும் வகையில் நடந்து கொண்ட வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் தொகுதியில் பாஜக வேட்பாளரான வருண் காந்தி முஸ்லீம்களின் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று பேசினார்.

இதையடுத்து அவரைக் கைது செய்ய உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. ஆனால், ஜாமீன் கோரி அவர் மனுக்கள் தாக்கல் செய்தார். அவை தள்ளுபடியானதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு முன் பிலிபித் நீதிமன்றத்தில் சரணடைய வந்தார்.

அப்போது பெரும் திரளான ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்களுடன் அவர் ஊர்வலமாக வந்தார். இந்த ஊர்வலம் வந்த பாதையெங்கும் பெரும் வன்முறை மூண்டது.

வாகனங்கள் எரிக்கப்பட்டன, கல்வீச்சும் நடந்தது. போலீஸாரும் தாக்கப்பட்டனர். இதையடுத்து பிலிபித்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறைக் கும்பலை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.

இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆழமான அமைதி காத்தார். அதே நேரத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வருணுக்கு ஆதரவாகப் பேசினார்.

வருண் ஊர்வலமாக வந்தபோது ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் கொடிகளுடன் தான் தொண்டர்கள் ஊர்வலம் வந்தனரே தவிர பாஜக கொடிகள் ஏதும் காணப்படவில்லை. இதனால் வருண் விஷயத்தில் ராஜ்நாத்-அத்வானி இடையே மோதல் ஏற்பட்டது வெளியில் தெரிந்தது.

ஆனால், இதில் விஎச்பி தலையிட்டு வருண் காந்தியின் தியாகத்தை வைத்து ஓட்டு பெறலாம் என அறிவுறுத்தியதையடுத்து நேற்று தான் வருணுக்கு ஆதரவாக அத்வானி கருத்துத் தெரிவித்தார்.

இந் நிலையில் நீதிமன்றத்தில் சரணடையும்போது வன்முறையை தூண்டியதாக கோத்வாலி போலீஸ் நிலையத்தில் வருண்காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை முயற்சி, வன்முறை, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கலவரத்தை தூண்டும் பேச்சு உட்பட அவர் மீது 3 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் கொலை முயற்சி வழக்கும் பதிவானதையடுத்து அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் போவதாக தகவல்கள் பரவின.

ஆனால், முதலில் இதை மாவட்ட கலெக்டர் மறுத்தார். ஆனால் நேற்றிரவு வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துவிட்டது.

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாலும் செயல்பட்டதாலும் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இதனால் வருண் காந்தி ஒரு வருடத்திற்கு சிறையில் இருக்கும் நிலை ஏற்படும். ஜாமீனும் கிடையாது. ஆனால், அவர் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

பாஜக கருப்பு தினம் கடைபிடிப்பு:

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருண்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஐவேத்கர் கூறுகையில்,
வருண் காந்தி மீது மாயாவதி அரசு பரம்பரை அரசியல் பகையை மனதில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இருந்தாலும் வருண் காந்திதான் பிலிபித் தொகுதி வேட்பாளர். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

இதை கண்டித்து உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் இன்று கருப்பு நாள் கடைபிடிப்பதாக பாஜக இளைஞரணித் தலைவர் தயாசங்கர் சிங் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல்வர் மாயாவதியின் உருவப் பொம்மைகள் எரிக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X