ராமர் கோவில் கட்டுவோம்-ராமர் பாலத்தைக் காப்போம்: பாஜக தேர்தல் அறிக்கை

பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. இதில் ராமர் கோவில் கட்டப்படும் என்பதை முக்கிய வாக்குறுதியாக பாஜக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனது இந்துத்வா கொள்கைக்கு பாஜக புத்துயிர் கொடுத்துள்ளது.
மேலும் இன்று ராமர் நவமி என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் ராமர் கோவில் கட்டப்படும், ராமர் பாலம் பாதுகாக்கப்படும் என பாஜக உறுதியளித்துள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய அம்சங்கள் ...
- விவசாயிளுக்கு 4 சதவீத வட்டியில் கடன்கள்.
- வீட்டுக் கடன்களுக்கான வட்டி ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கான கடனும் தள்ளுபடி செய்யப்படும்.
- ஏழைகளுக்கு அரிசி மற்றும் கோதுமை கிலோ 2 ரூபாய்க்கு வழங்கப்படும்.
- பெண் குழந்தைகளுக்கு ரூ. 1 லட்சம் உதவி தரும் லடாலி லக்ஷ்மி யோஜனா திட்டம் அமல்படுத்தப்படும்.
- வருமான வரி சலுகைக்கான உச்சவரம்பு ரூ. 3.5 லட்சமாக உயர்த்தப்படும்.
- ராமர் பாலம் பாதுகாக்கப்படும்.
- வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கு மாதத்திற்கு கிலோ ரூ 2 என்ற வீதத்தில் 35 கிலோ அரிசி வழங்கப்படும்.
- பொடா போன்ற கடுமையான சட்டம் தீவிரவாதத்தை ஒடுக்கக் கொண்டு வரப்படும்.
- படையினருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- வெளிநாட்டு வங்கிகளில் முடங்கி கிடக்கும் கருப்புப்பணம் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்.
- இந்தியா வரும் வெளிநாட்டுப்பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்படும்.
- கிராமங்களில் இணையதள வசதி செய்து தரப்படும்.
- நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
- மாவோயிஸ்டுகள் அட்டகாசம் ஒடுக்கப்படும்.
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திதர புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
- அனைத்துப் பாதுகாப்புப் படையினருக்கும் ஒரே ரேங்க் ஒரே பென்ஷன் திட்டம் கொண்டு வரப்படும்.
- பாதுகாப்புப் படையினருக்கு தனியாக ஊதியக் கமிஷன் அமைக்கப்படும்.
- பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வரப்படும்.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்தான் தேர்தல் அறிக்கைகளை பாஜக வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில் வரும் லோக்சபா தேர்தலுக்கு தனது கட்சி சார்பிலேயே தேர்தல் அறிக்கையை வெளியிட முடிவு செய்து வெளியிட்டுள்ளது பாஜக.
கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications