மே.வங்கம்-கேரளம்: இடதுசாரிகளுக்கு வீழ்ச்சி-கருத்துக்கணிப்பு
டெல்லி: என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில், மேற்கு வங்க மாநிலத்திலும் கேரளத்த்லும் இடதுசாரிகளுக்கு பெரும் சரிவு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
என்டிடிவி, ஜிஎப்கே மோட் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 2477 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. மார்ச் 14 முதல் 26ம் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு நடந்தது.
இதில், சிறந்த முதல்வராக யார் இருப்பார்கள் என்ற கேள்விக்கு தற்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யாவுக்கு 46 சதவீதம் பேரும், மம்தா பானர்ஜிக்கு 32 சதவீதம் பேரும், பிரணாப் முகர்ஜிக்கு 22 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர்.
வளர்ச்சித் திட்டங்களில் அரசின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக 61 சதவீதம் பேரும், மோசம் என 31 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் அரசின் செயல்பாடு நன்றாக இருப்பதாக 56 சதவீதம் பேரும், மோசம் என 35 சதவீதம் பேரும் சொல்லியுள்ளனர்.
வேலை வாய்ப்புகளை உருவாக்கியதில் அரசின் செயல்பாடு நன்று என 47 சதவீதம் பேரும், மோசம் என 43 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தியதில் அரசு செயல்பட்ட விதம் மோசம் என 50 சதவீதம் பேரும், நன்று என 41 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
கூர்க்காலாந்தை தனி மாநிலமாக அறிவிக்கக் கூடாது என 77 சதவீதம் பேரும், ஆக்க வேண்டும் என 5 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
சிங்கூரை விட்டு டாடா நானோ போனது மாநிலத்திற்கு நல்லதில்லை என்று 64 சதவீதம் பேரும், நல்லதுதான் என 22 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 சீட்கள் உள்ளன. இதில் இடதுசாரி கூட்டணிக்கு 28 இடங்கள் தான் கிடைக்கும். காங்கிரஸ்-திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு 14 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இங்கு பெருவாரியான இடங்களை இடதுசாரிகள் தான் கைப்பற்றியிருந்தனர்.
கேரளாவிலும்...
கேரளாவைப் பொறுத்தவரை சிறந்த முதல்வராக அச்சுதானந்தனுக்கு 43 சதவீதம் பேரும், உம்மன் சண்டிக்கு 33 சதவீதம் பேரும், ரமேஷ் சென்னிதாலாவுக்கு 14 சதவீதம் பேரும், பினரயி விஜயனுக்கு 10 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வளர்ச்சித் திட்டங்களில் அரசின் செயல்பாடு நன்று என 45 சதவீதம் பேரும், மோசம் என 43 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
மத நல்லிணக்கத்தை பேணுவதில் அரசு சிறப்பாக செயல்படுவதாக 46 சதவீதம் பேரும், மோசம் என 40 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
வேலை வாய்ப்பை உருவாக்கியதில் அரசு மோசமாக செயல்பட்டதாக 51 சதவீதம் பேரும், நன்றாக செயல்பட்டதாக 35 சதவீதம் பேரும் தெரிவித்தனர்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு தவறி விட்டதாக 51 சதவீதம் பேரும், சிறப்பாக செயல்பட்டதாக 36 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
அச்சுதானந்தன், பினரயி விஜயன் இடையிலான கோஷ்டி மோதலால் கட்சிக்கு பாதகம் ஏற்படாது என 71 சதவீதம் பேரும், பாதிப்பு ஏற்படும் என 14 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் மொத்தம் 20 இடங்கள். இதில் காங்கிரஸ் கூட்டணிக்கு 13 இடங்களும், இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு 7 இடங்களும் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது. கடந்தமுறை 19 இடங்களை இடதுசாரிகள் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications