வட மாவட்டங்களில் அதிக இடங்களில் அதிமுக போட்டி
சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவைப் போலவே அதிமுகவிலும் 2 பெண்களுக்கு மட்டுமே சீட் தரப்பட்டுள்ளது.
திமுக சார்பில் திருவள்ளூர் தனி தொகுதியில் புதுமுக வேட்பாளர் காயத்ரி ஸ்ரீதரனுக்கும், கன்னியாகுமரியில் ஆசிரியை ஹெலன் டேவிட்சனும் போட்டியிடுகின்றனர்.
அதிமுகவில் நெல்லை மற்றும் நாமக்கல் தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் தூத்துக்குடியில் போட்டியிடும் சிந்தியா பாண்டியன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மனைவி ஆவார். நாமக்கல் தொகுதியில் அதிமுக மகளிரணியைச் சேர்ந்த வைரம் தமிழரசி நிறுத்தப்பட்டுள்ளார்.
வட மாவட்டங்களில்...
வழக்கமாக தென் மாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிடும் அதிமுக இம்முறை வட மாவட்டங்களில் தான் அதிக இடங்களில் போட்டியிடுகிறது.
இங்கு மொத்தம் 9 இடங்களில் அது போட்டியிடுகிறது. தென் மாவட்டங்களில்தான் மொத்தமே 6 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.
தமிழகத்தின் மேற்குப் பகுதியில் 4 தொகுதிகளிலும், மத்தியில், 4 தொகுதிகளிலும் அதிமுக களம் இறங்குகிறது.
எம்எல்ஏ தம்பிதுரைக்கு சீட்:
கரூரில் மூத்த அதிமுக தலைவரான தம்பித்துரைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது தம்பித்துரை எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கபாலுவுக்கு கஷ்டம்...:
அதே போல சேலம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் செம்மலை போட்டியிடுகிறார். அங்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிற்பார் எனத் தெரிகிறது. செம்மலை வலுவான வேட்பாளர் என்பதால் தங்கபாலுவுக்கு கடும் போட்டி இருக்கும்.
போயஸ் தோட்டத்து புதிய விஐபி:
காஞ்சீபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் ராமகிருஷ்ணன், போயஸ் தோட்டத்தில் இப்போது கொடி கட்டிப் பறக்கும் டாக்டர் வெங்டேசின் நண்பர் ஆவார்.
போயஸ் கார்டனில் ஆதிக்கம் செலுத்தும் சசிகலா குரூப்பின் ஆட்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். சில காலம் பாஸ்கரன், சில காலம் தினகரன், சில காலம் திவாகரன், சில காலம் நடராஜன் என ஆதிக்க சக்திகள் மாறும்.
இப்போது அங்கு கொடி கட்டிப் பறப்பது சசிகலான் அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேஷ் தான். இம்முறை கூட்டணி பேச்சு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்திலும் அவரது கை ஓங்கியிருந்தது.
காஞ்சீபுரத்தில் தனது நண்பரான டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு சீட்டை வாங்கித் தந்துள்ளார். இவருக்காக இந்தத் தொகுதியையே மதிமுகவுக்குத் தர மறுத்துவிட்டார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications