'இலங்கை': தேர்தலை புறக்கணிக்க தயார்-விஜய்காந்த்
சிவகங்கை: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தேர்தலை புறக்கணிப்போம் என்று சொன்னேன். இப்போதும் கூட சொல்கிறேன். திமுக, அதிமுக ஒத்து வந்தால் நான் இப்போது கூட தேர்தலை புறக்கணிக்க தயாராக உள்ளேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சிவகங்கை தொகுதி வேட்பாளர் ரெஜினா பாப்பாவை ஆதரித்து இளையான்குடி, மறவமங்கலம், திருப்பதூர், காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்த விஜய்காந்த் பேசுகையில்,
இந்திய வரைபடத்தில் தமிழகத்தை பார்த்தால் குறுகியதாக இருக்கும். அதுபோலதான், நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சியும் உள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல், கரும்புக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்து தருவோம் என்கிறார்கள். இதே வார்த்தையை அடுத்த முறையும் தேர்தலில் கூறுவார்கள்.
பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள், கடைக்கு விடுமுறை விடுவார்கள், பஸ்சுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் இங்கே தான் மின்சாரத்துக்கும் விடுமுறை விடுகிறார்கள். இதற்குக் காரணம் ஜெயலலிதாதான். அவருடைய ஆட்சியில் புதிய மின் திட்டங்களை போட்டிருந்தால் தற்போது மின்வெட்டு பிரச்சனையே இருந்திருக்காது.
அதுபோல இந்த ஆட்சியில் புதிய திட்டங்களை உருவாக்கினால் வருங்காலங்களில் மின்வெட்டு வராது. இவர்கள் இருவரும் தெரிந்தே தவறு செய்கின்றனர்.
அரிசி ஒரு ரூபாய்க்கு போட்டார்கள். ஆனால் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, எண்ணை, கோழித் தீவனம் போன்றவைகள் என்ன விலையில் விற்கின்றன?.
ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதை ஓட்டுபோடும்போது மட்டும் தான் காட்ட முடியும். இப்போது இவர்களை மாற்றவில்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.
மக்கள் சக்தி இருந்ததால்தான் சுதந்திரம் கிடைத்தது. அதே போல நானும், மக்கள் சக்தியை நம்பி தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தேர்தலை புறக்கணிப்போம் என்று சொன்னேன். இப்போதும் கூட சொல்கிறேன். திமுக, அதிமுக ஒத்து வந்தால் நான் இப்போது கூட தேர்தலை புறக்கணிக்க தயாராக உள்ளேன்.
இலங்கையில் தினமும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் இவர்கள் பெட்டிப் பாம்பாக படுத்துக்கொண்டு கூட்டணியை மட்டும் பேசுகிறார்கள்.வங்க தேசத்தில் பிரச்சினை வந்த போது, இந்திய ராணுவம் எப்படி உள்ளே நுழைந்தது? ஆனால் தினமும் குண்டுமழை பெய்து கொத்துக்கொத்தாய் ரத்த சகதியில் சாகடிக்கப்படும் எனது தமிழினத்தை காப்பாற்ற ஏன் இந்திய அரசு ராணுவத்தை அனுப்பி போரை நிறுத்தவில்லை?.
இது தோசையை திருப்பி போடவேண்டிய நேரம். என் மீது வழக்கு போடுவேன் என்கிறார்கள். போடுங்களேன்.. என்றார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications