வெறிப் பேச்சு பேச மாட்டேன்..ஜாமீ்ன் கோரும் வருண்
டெல்லி: இனிமேல் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் வருண் காந்தி உறுதியளித்து மனு தாக்கல் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி, தனது பிரசாரத்தின்போது முஸ்லிம்களின் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்றார்.
இதையடுத்து அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பல நீதிமன்றங்களை அணுகினார் வருண். ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து ஊர்வலமாக வந்து சரணடைந்தார்.
அந்த ஊர்வலத்தின்போதும் பெரும் கலவரம் நடந்தது. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.
இதை எதி்ர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வருண். மேலும் தன்னை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யவும், பிரசாரம் தொடங்கவும் வசதியாக இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று வருண் காந்தி தரப்பு கோரியது.
அடுத்த மதத்தினரை ஆத்திரமூட்டும் வகையில் பேச மாட்டேன் என்று வருண் காந்தி உறுதியளித்தால் அவரை ஜாமீனில் விடுவிக்க ஆட்சேபம் இல்லை என்று உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞரும் தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஜாமீனில் விடுவித்தால் ஆத்திரமூட்டும் வகையிலோ அல்லது மத உணர்வுகளைத் தூண்டு வகையிலோ பேச மாட்டேன் என வருண் காந்தி உறுதிமொழிப் பத்திரம் வழங்க வேண்டும். அப்போதுதான் அவரை ஜாமீனில் விடுவிக்க முடியும் என்று நிபந்தனை விதித்தார்.
இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வதாக வருண் காந்தி சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் வருண் காந்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.
மேலும் விசாரணையின் போது பேசிய நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி இருப்பது, மிகவும் அதிகபட்ச நடவடிக்கையாகும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
லாலு மீது நடவடிக்கை இல்லை:
இந் நிலையில் வருண் காந்தியை ரோடு ரோலரை ஏற்றி கொன்றிருப்பேன் என்று பேசிய ரயில்வே அமைச்சர் லாலுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு "சட்டம் என்கிற ரோலரை' என்ற பயன்படுத்து சட்டப்படி நசுக்கியிருப்பேன் என்பதைத் தான் அப்படிக் கூறினேன் என்று லாலு விளக்கமளித்தார்.
இந்நிலையில், துணை தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருண் காந்தி ஒரு சமூகத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. லாலு தனிப்பட்ட நபருக்கு எதிராகப் பேசியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மூத்த தலைவர் என்ற முறையில் லாலு அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. எனவே, அவர்களது பேச்சுகள் குறித்து தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications