தம்பிகள் 'தம்' அடிக்க முடியலையே..நாயுடு வருத்தம்!
ஹைதராபாத்: தீப்பெட்டி விலையை ஒரு ரூபாயாக உயர்த்தி விட்டனர். இதனால் எனது தம்பிகளால் சிகரெட் பிடிக்கக் கூட முடியவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டுள்ளார் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு.
கிழக்கு கோதாவரி மாவட்டம் ரம்பசோதாவரத்தில் நாயுடு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்த போது 20 ரூபாயாக இருந்த மலிவு விலை மதுவை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் 60 முதல் 70 ரூபாயாக உயர்த்தி விட்டனர். இதனால் குடிமக்கள் சிரமப்படுகின்றனர்.
மது விலையை குறைப்பேன்..:
எனவே மீண்டும் தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்தால் பழையபடி மது விலையை குறைப்போம்.
50 பைசாவாக இருந்த தீப்பெட்டியின் விலை ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால் எனது சகோதரர்கள் சிகரெட் பிடிக்க கூடமுடியவில்லை.
உலகெங்கிலும் பல நாடுகளில் ஏழைகளுக்காக அமல்படுத்தும் நலத்திட்டங்களை பரிசோதனை செய்து, மக்களுக்காக பணபரிமாற்ற திட்டத்தை (ஏழைகளுக்கு மாதம் தோறும் 1000, 1500, 2000) தேர்ந்தெடுத்தோம். ஆனால் அதை எதிர்க்கிறார்கள்.
இவர்கள் வீடுகளில் அறைக்கு ஒரு டி.வி. இருக்கலாம். ஆனால் ஏழைகளுக்கு கலர் டி.வி. கொடுக்கிறோம் என்றால் அதை எதிர்க்கிறார்கள்.
கிராமங்களில் கூட செல்போன்களை உபயோகத்துக்கு கொண்டு வந்தது நான்தான். சாலைகள் அமைத்ததும் எங்கள் ஆட்சியில்தான்.
சத்யம் நிறுவனர் ராமலிங்கராஜுவை, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் பக்கத்தில் அமர வைத்து நான் கெளரவப்படுத்தினேன். ஆனால் முதல்வர் ராஜசேகரரெட்டி அவரை ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு ஊழல் செய்ய கற்றுக்கொடுத்ததே ராஜசேகர ரெட்டிதான்.
பிரஜைகள் இல்லாத பிரஜா ராஜ்ஜியம்..
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி பிரஜைகளே இல்லாத ராஜ்ஜியமாகி விட்டது. டிரைவர் சரியாக இல்லாத அந்த ரெயில் வண்டியில் ஏறினால் (சிரஞ்சீவி கட்சியின் சின்னம் ரயில் பெட்டி) மரணம்தான் என்றார் நாயுடு.


Click it and Unblock the Notifications
