இன்று அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிமுகம்
சென்னை: அதிமுக வேட்பாளர் மாற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.
தீவுத் திடலில் நடைபெறும் அக்கூட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை வகிக்கிறார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன், தேசியச் செயலாளர் டி. ராஜா, மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்தக் கூட்டணியின் சார்பில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
இதையடுத்து வரும் 18ம் தேதி திருநெல்வேலியில் தனது பிரசாரத்தைத் ஜெயலலிதா தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 25 நாள்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தாலும் வேட்பு மனு வாபஸ் பெறும் கடைசி நாள் வரை அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் தொடரலாம்.
வைகோ வருவார்?:
அதிமுக கூட்டணியில் பெரும் வருத்தத்துடன் இடம் பெற்றுள்ள வைகோ இன்றைய வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை புறக்கணிக்கலாம் என்றும் ஒரு பேச்சு நிலவியது.
அதிமுகவுடனான தொகுதி உடன்பாட்டை ஒரு உதவியாளர் மூலம் ஜெயலலிதா அனுப்பி வைக்க, அதில் கையெழுத்துப் போட்டு ஒரு உதவியாளர் மூலமே திருப்பி அனுப்பினார் வைகோ.
மேலும் இந்தக் கூட்டணியில் போட்டியிடும் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், மதிமுக வேட்பாளர்கள் யாரும் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை.
இதனால் இன்றைய கூட்டத்தை வைகோ புறக்கணிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் கூட்டத்துக்கு வருவார் என்கின்றனர் மதிமுக தரப்பில்.
திமுகவுக்கு தாவிய மூவேந்தர் முன்னேற்ற கழகம்:
இந் நிலையில் அதிமுக கூட்டணியில் நெடுங்காலமாக இருந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகம் அதிலிருந்து விலகுவதாகவும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாகவும் அறிவித்துள்ளது.
சசிகலா தரப்புக்கு நெருக்கமான இந்தக் கட்சியின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நிருபர்களிடம் கூறுகையில்,
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சி தொடங்கப்பட்டது முதல் கடந்த 10 வருடங்களாக அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தோம். இந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டோம். திருச்சி தொகுதி ஒதுக்கப்படாவிட்டால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியை தருமாறு அதிமுகவிடம் கேட்டோம்.
ஆனால் ஜெயலலிதா எங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் எங்கள் கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் கடந்த 12ம் தேதி தஞ்சையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம்.
அதில் பங்கேற்ற நிர்வாகிகள் 100க்கு 100 சதவீதம் பேர் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று கருத்து தெரிவித்தனர். 95 சதவீதம் பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். 5 சதவீதம் பிற கூட்டணியில் சேரலாம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து எங்கள் ஆதரவை தெரிவிக்க உள்ளோம். இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம்.
கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று சமூகத்தினரையும் சேர்த்து தேவர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் நாங்கள் முதல்வரிடம் வைக்க உள்ளோம்.
அதைத்தவிர வேறு எந்த கோரிக்கையையும் நாங்கள் கலைஞரிடம் வைக்கப் போவதில்லை. எங்கள் சமூகத்தினர் அதிகம் உள்ள திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், தஞ்சை, மதுரை ஆகிய 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்படுவது உறுதி என்றார்.












Click it and Unblock the Notifications