4 மத்திய அரசு அலுவலகங்களுக்கு 'சீல்' வைத்த மர்மக் கும்பல்
சென்னை: இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து சென்னையில் சாஸ்திரி பவன் உள்ளிட்ட 4 முக்கிய மத்திய அரசு அலுவலக வளாகங்களுக்கு பூட்டு போட்டு, சீல்' வைத்துவிட்டுச் சென்றது மர்ம கும்பல்.
சென்னையில் உள்ள சில செய்தி நிறுவனங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு ஆசாமி, சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், நுங்கம்பாக்கத்தில் உள்ள மததிய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவன் மற்றும் வருமான வரி அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு சீல்' வைத்துவிட்டோம். இலங்கை பிரச்சனையில் இந்திய அரசு தமிழர்களை காப்பாற்ற தவறியதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்றார்.
இதையடுத்து நிருபர்கள், கேமராமேன்கள் அந்த அலுவலகங்களுக்கு விரைந்தபோது தலைமை தபால் அலுவலகத்தின் வெளிப்புற கேட்டில் பெரிய பூட்டு தொங்கியது. பூட்டுக்கு மேலே வெள்ளை துணியை சுற்றி சீல்' வைக்கப்பட்டிருந்தது.
அதே போல பி.எஸ்.என்.எல். அலுவலக கேட்டிலும், வருமானவரித் துறை அலுவலக கேட்டிலும் பூட்டு போடப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது.
சாஸ்திரி பவன் கேட்டில் இரும்பு சங்கிலியைக் கட்டி பெரிய பூட்டு தொங்கியது. அங்கும் சீல் வைக்கப்பட்டிருந்தது.
இதை கேமரமேன்கள் சொல்லித் தான் அந்தந்த அலுவலக வாட்ச்மேன்களுக்கே தெரிய வந்தது. இதயைடுத்து சீலை உடைத்து பூட்டுகளை வாட்ச்மேன்கள் உடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் தனிப் படைகள் அமைத்து பூட்டு போட்ட மர்மக் கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த 4 அலுவலகங்களிலும் வாட்ச்மேன்களிடம் விசாரித்தபோது, நாங்கள் இங்கே தான் இருந்தோம் (தூங்கிக் கொண்டு!), பூட்டு போட்டது யார் என்று தெரியவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications