அதிமுக கூட்டணி- தேசிய லீக் விலகல்
சென்னை: பாஜகவுக்கு ரகசிய ஆதரவு தருவதாக குற்றம்சாட்டி, அதிமுக கூட்டணியை விட்டு தேசிய லீக் கட்சி விலகியுள்ளது. மேலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது.
நீண்ட காலமாக அதிமுக கூட்டணியில் இருந்த இந்தக் கட்சியின் தலைவர் எம்.பஷீர் அகமது நிருபர்களிடம் கூறுகையில்,
அதிமுக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகுகிறோம். தமிழக மக்கள் தொகையில் முஸ்லிம் சமுதாயத்தினர் 50 லட்சம் பேர் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் இவர்களில் 80 சதவீத ஓட்டுகளை அதிமுக கூட்டணிக்கு பெற்றுத் தந்தோம்.
ஆனால் இப்போது ஒரு சீட் கூட எங்களுக்கு ஒதுக்காமல் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடந்து கொண்டுள்ளார்.
மேலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, அதிமுக தங்களை ஆதரிப்பதாக சமீபத்தில் கருத்து கூறி இருந்தார். அதை ஒப்புக்காக கூட ஜெயலலிதா மறுக்கவில்லை. பாஜகவுடன் ஒட்டு, உறவு இல்லை என்றும், அவர்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றும் அவர் சொல்லவில்லை.
மாறாக பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோரோடு தான் கூட்டணி வைத்துள்ளதாகவும் வேறு யாரோடும் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா கூறினார். அதே நேரத்தில் ஒரு திறமையான அரசியல்வாதி எந்த நல்ல வாய்ப்பையும் தவற விட மாட்டார் என்றும் கூறியுள்ளார்.
இது எங்களுக்கான பதில் என்றே உணர்கிறோம். எதிர்காலத்தில் பாஜகவுடன் உறவு வைத்துக் கொள்ள அதிமுக மறைமுகமாகவும், ரகசியமாகவும் தேர்தலை சந்திக்கிறது. இதை முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள். எனவே சிறுபான்மை மக்கள் அனைவரும் அதிமுக கூட்டணியை புறக்கணிக்க வலியுறுத்துவோம்.
முஸ்லிம் சமுதாயத்துக்கு சட்டமன்றத்தில் 2 இடங்களும், ராஜ்யசபாவில் ஒரு இடமும், தேர்தலில் போட்டியிட 2 இடங்களையும் திமுக வழங்கியுள்ளது. மேலும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை முதல்வர் கருணாநிதி வழங்கினார். உலமாக்களுக்கு நலவாரியம் அமைத்தார். இதைப் பாராட்டி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கேட்டு தேசிய லீக் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யும் என்றார்.
முமுக ஆதரவு:
இந் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் 40 தொகுதிகளிலும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு தங்கள் அமைப்பு முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தனர்.
தனபாலன் தலைமையிலான தமிழ்நாடு நாடார் பேரவையினரும் முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications