தங்கபாலுவுக்கு எதிராக தொண்டர்கள் ரகளை, கோஷம்-சேலத்தில் பரபரப்பு
சேலம்:சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த அவரை பேசவிடாமல் தடுத்து வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சேலம் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு போட்டியிடுகிறார்.
கடந்த முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற தங்கபாலு அங்கு மீண்டும் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவருக்கு எதிராக கட்சியில் இருக்கும் சில எதிர்கோஷ்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை சேலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் சேலத்தை சேர்ந்த திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டம் துவங்கியதும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பேசினர். அவர்கள் கோஷ்டி பூசலை மறந்து அனைவரும் காங்கிரசின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கூறினர்.
இவர்களை தொடர்ந்து தங்கபாலு பேச வந்தார். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து அவர் பேசுவதற்கு எதிர்ப்பு குரல் கிளம்பியது.
சேலம் இளைஞர் காங்கிரசை சேர்ந்த சிலர் அவர் பேசக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். வேட்பாளர் தேர்வில் தங்களுக்கு திருப்தி இல்லை என்றும், தங்களுக்கு இருக்கும் அதிருப்தியை விளக்க தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என அவர்கள் கூச்சலிட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக மேலும் சிலர் வேட்பாளர் தேர்வுக்கு போர்கொடி உயர்த்தியதில் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்ய தங்கபாலு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குறுக்கிட்டு, எதிர் கோஷ்டியினரை சமாதானம் செய்ய முயற்சித்தார்.அப்போது அவர் கூறுகையில், உங்கள் குறைகளை மாலையில் நடக்கும் கூட்டத்தில் தெரிவியுங்கள். அதை தீர்த்து வைக்க நான் முயற்சி செய்கிறேன் என்றார்.
இதிலும் சமாதானம் அடையாத சிலர் மேடையை முற்றுகையிட்டு தங்கபாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தங்கபாலுவுடன் வாக்குவாதம் செய்தார்கள். சிலர் மேடைக்கு வந்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் முறையிட்டனர். பின்னர் ஒருவழியாக அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
அதன்பின்னர் தங்கபாலு பேசுகையில்,
சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
எனவே வெற்றிக்காக தீவிரமாக உழைத்திட உங்களை கேட்டுக்கொள்கிறேன். குறைகளை மாவட்ட தலைவர்கள் மூலம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications