கூடுதல் பாதுகாப்பு வேண்டும்- தேர்தல் ஆணையத்திடம் வருண் கோரிக்கை
டெல்லி: பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாஜக இளம் தலைவர் வருண் காந்தி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிலிபித் தொகுதி பாஜக வேட்பாளர் வருண் காந்தி பிரசாரத்தின் போது முஸ்லீம்களுக்கு விரோதமாக பேசி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ள அவருக்கு ஆபத்து அதிகமிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து அவர் தனது பாதுகாப்பை அதிகரிக்கும் படி தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறி்த்து 29 வயதான வருண் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
ஒரு உண்மையான இந்தியனாக தீவிரவாதத்துக்கு எதிராக பேசியதற்கு என்னை தீவிரவாதிகள் குறிவைத்துள்ளனர். இதை உளவுத்துறையும் உறுதிபடுத்தியுள்ளது.
இதனால் எனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டு கொள்கிறேன். உத்தர பிரதேசத்தில் பிரசாரம் செய்யும் போது அதிக பாதுகாப்பு வழங்குமாறு அம்மாநில அரசிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், இதையும் மாயாவதி அரசு அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறது.
அதனால் தான் தற்போது உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். நீங்கள் தேர்தல் சமயத்தில் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என அக்கடிதத்தில் வருண் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications