அனைத்து தமிழர்களும் மீட்பாம்!: கூண்டோடு ஒழித்து கட்ட திட்டம்?
வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது. ஐ.நா., சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால் இலங்கை அரசு மட்டும் இதை மறுத்து வந்தது. அங்கு 50 ஆயிரம் பேர்தான் இறுக்கிறார்கள் எனக் கூறி வந்தது.
ஆனால் தற்போது 80 ஆயிரம் பேரை மீட்டுள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது. மேலும், அத்தனை பேரும் மீட்கப்பட்டு விட்டதாகவும், பெரும்பாலானவர்கள் தப்பி வந்து விட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தகவலை விடுதலைப் புலிகள் தரப்பு மறுத்துள்ளது. இன்னும் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் அங்கு இருப்பதாகவும் புலிகள் தரப்பு கூறுகிறது.
எனவே மீதம் உள்ள தமிழர்களை, விடுதலைப் புலிகளோடு சேர்த்து கூண்டோடு அழித்து விட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற பேரச்சம் எழுந்துள்ளது.
இன்று இலங்கை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
ராணுவத்தின் 58-வது படை பிரிவு இதுவரை 48 ஆயிரத்து 501 தமிழர்களை மீட்டு உள்ளது. 55-வது டிவிசன் 10 ஆயிரத்து 743 பேரை மீட்டு உள்ளது. 53-வது டிவிசன் 3267 பேரை மீட்டு உள்ளது. இத்துடன் நேற்று இரவு வரை 62 ஆயிரத்து 609 பேரை மீட்டு உள்ளோம்.
தற்போதைய நிலையில் போர் பகுதியில் பொது மக்கள் வேறு யாரும் இல்லை. அத்தனை பேரும் தப்பி வந்து விட்டனர். மக்கள் வெளியேறிய பகுதியில் ராணுவம் உள்ளே நுழைந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 80 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது. எனவே அரசு கூறுவது உண்மையா அல்லது ராணுவம் கூறுவது உண்மையா என்பதில் குழப்பம் எழுந்துள்ளது.
ஆனால், விடுதலைப் புலிகளோடு சேர்த்து மிச்சம் மீதி உள்ள லட்சக்கணக்கான மக்களையும் ஒட்டு மொத்தமாக தீர்த்துக் கட்ட இலங்கை அரசும், ராணுவமும் சதி செய்கின்றனவோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் எங்கே?:
இதற்கிடையே அரசுப் பகுதிக்கு தப்பி வந்ததாக கூறப்படும் தமிழர்களில் 45 ஆயிரம் பேர் குறித்த கணக்கு இலங்கை அரசு வசமோ, ராணுவம் வசமோ இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. எனவே இலங்கை அரசு கூறி வரும் 60 ஆயிரம் தமிழர்கள் தப்பி வந்து விட்டார்கள் என்ற கணக்கு பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் எழு்நதுள்ளது.
கடந்த 2 நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் புகுந்து ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கிருந்து திமுதிமுவென தமிழர்கள் தப்பி அரசுப் பகுதிக்கு வந்து விட்டதாகவும், புலிகள் வசம் இருந்த தமிழர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை ராணுவமும், அரசும் கூறின.
2 நாட்களிலும் மொத்தமாக 60 ஆயிரம் பேர் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் மட்டுமே முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் இல்லை.
ராணுவத்தின் தாக்குதல் மிகக் கடுமையாக இருந்ததால் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறி ராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தமிழர்கள் வந்துள்ளனர்.
கடல்வழியாக வெளியேறிய சுமார் 3 ஆயிரம் பேர் படகுகள் மூலமாக பருத்தித்துறையைச் சென்றடைந்திருக்கின்றனர். இவர்கள் பின்னர் அங்கிருந்து ராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டு தென்மராட்சிப் பகுதியில் உள்ள முகாம்களில் கடுமையான பாதுகாப்புகளுக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நந்திக் கடல் கழிமுகத்தைத் த்தாண்டி புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதி வழியாக தரை மார்க்கமாக வெளியேறிய தமிழர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களில் இவ்வாறு வெளியேறியவர்களில் சுமார் 6 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டு ஓமந்தைப் பகுதியில் உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டனர். வெளித்தொடர்புகள் எதுவும் அற்ற நிலையிலேயே இவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு சென்ற சுமார் 3 ஆயிரம் பேரையும், வவுனியாவுக்கு வந்த சுமார் 6 ஆயிரத்து 500 பேரையும் தவிர்த்துப் பார்த்தால், அரசு கூறிய 56 ஆயிரம் பேரில் மீதி உள்ள சுமார் 45 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது என சந்தேகம் எழுந்துள்ளது.
மீட்டுக் கொண்டு வரப்பட்டவர்களில் பலர் குறிப்பாக இளைஞர்கள், ஆண்கள் உள்ளிட்டோர் ராணுவ முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சித்திரவதையுடன் கூடிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications