போர் நிறுத்த அறிவிப்பு ஒரு மோசடி-இலங்கை எம்.பி
சென்னை: இலங்கை அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு மோசடி நடவடிக்கை. அங்கு தொடர்ந்து விமானத் தாக்குதல் நடந்து வருகிறது என்று அந் நாட்டு தமிழ் எம்பியான சிவாஜி லிங்கம் கூறினார்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பியான சிவாஜி லிங்கம் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், இயந்திர தாக்குதலை நடத்த மாட்டோம், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்துள்ளன. ஆனால், அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலே முள்ளிக்கால்வாய் பகுதியில் மக்கள் உள்ள இடங்களை பார்த்து 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியுள்ளன.
மேலும், பிற்பகலிலும் மற்றொரு விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் ராணுவ வீரர்கள் புகுந்து அங்குள்ள மக்களை பிடித்து சென்றுள்ளனர் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் இந்த போர் நிறுத்த அறிவிப்பு ஒரு மோசடிதான். இது உலக நாடுகளையும், தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட நாடகம். சர்வதேச நாடுகளும், பன்னாட்டு அமைப்புகளும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இதற்காக விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதை கண்காணிக்க கண்காணிப்பு குழு ஒன்றை ஐ.நா. அமைக்க வேண்டும். அதில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இடம் பெற வேண்டும்.
முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். அவர் காங்கிரஸ் அரசுக்கு எதிராகத்தான் உண்ணாவிரதம் இருந்தார். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இலங்கை தமிழர்களை காப்பாற்ற உடனடியாக தமிழக அரசு, மத்திய அரசுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்றார்.
மக்களை ஏமாற்றும் செயல்..நெடுமாறன்:
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி உண்ணாநிலை போராட்டம் நடத்தியதால்தான் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சி நடைபெறுகிறது. உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப் புலிகள் மட்டுமே போர் நிறுத்தம் செயëய முன்வந்தனர். ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்சே அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
நேற்று நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை சிங்கள ராணுவ விமானங்கள் ஈழத் தமிழர்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளன. மேலும் சிங்கள அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை. அங்கு தற்போது போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உண்மையான முயற்சிகளைச் செய்யாமல் மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுவதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று எச்சரிக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications