'ஸ்வைன் ப்ளூ': சென்னையில் பன்றிகளை கொல்ல உத்தரவு-ஸ்கேனர் கொண்டு பயணிகளுக்கு சோதனை

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றிக் காய்ச்சல் பரவி வருவதையடுத்து இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளை சோதனையிட்டு வருகின்றனர்.
பல்வேறு நாடுகளிலும் பயணிகளின் உடல் வெப்பத்தை அறியும் ஸ்கேனர்களை வைத்து வைரஸ் பாதி்ப்பு உள்ள பயணிகளை அடையாளம் கண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து தினமும் சராசரியாக 10,000 பயணிகள் வருகின்றனர். அவர்களில் வட அமெரிக்க பயணிகளை பரிசோதிக்க 4 கெளண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
டாக்டர்கள் மற்றும் நர்சுகள் என 35 பேர் கொண்ட குழு பயணிகளுக்கு ஸ்வைன் வைரஸ் தாக்குதல் உள்ளதா என்று 24 மணி நேரமும் பரிசோதிக்கின்றனர்.
அதே போல தமிழக அரசும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னையில் பன்றிகளைக் கொல்லவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மாநகராட்சி பகுதியில் பன்றிகள் வளர்க்க அனுமதி இல்லை. இதை மீறி யாராவது பன்றி வளர்த்தால் அது சட்ட விரோம். அந்தப் பன்றிகள் கொல்லப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள மாநகராட்சி 25 பேர் குழுவையும் அறிவித்துள்ளது. இந்தக் குழு சென்னையில் பன்றி வளர்க்கப்படும் இடங்களை அறிந்து நடவடிக்கை எடுப்பர்.
மேலும் பன்றிகளின் ரத்த மாதிரிகளை எடுத்து ஸ்வைன் வைரஸ் தாக்குதல் உள்ளதா என்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் பன்றிக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் அதிக அளவில் பரவ வாய்ப்பில்லை என்று கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந் நிலையில் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பன்றி ப்ளூ காய்ச்சல் என்பது எச்1என்1 என்ற ஒரு வகை வைரஸால் பரவக்கூடியது. இது பெரும்பாலும், பன்றிகளில் பெருவாரியாக காணப்படும். இந்த வகை வைரஸ்கள், பன்றிகளின் சுவாசக் குழாயை பாதிக்கும். பன்றிகளுக்கு இறப்பை ஏற்படுத்தும் இந்த நோய், பன்றி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு,பரவ வாய்ப்புண்டு.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல் மூலமும், நோய் தொற்று உள்ள ஒரு மனிதரின் உடைகளை கையாள்வதன் மூலமும் மற்கவர்க்கு பரவக்கூடும். அதுமட்டுமல்ல தொற்றுள்ளவர் அருகில் வாழ்பவர்களுக்கும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு.
காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண், பசியின்மை, உடல்வலி, தலைவலி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள். பெரும்பாலும் 20 வயது முதல் 50 வயது உடையவர்களுக்கு இந்த நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது.
இந்தியாவில் பன்றி ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படவில்லை என்றாலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலையம் தவிர துறைமுகங்களில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அயல் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுகாதார முறைப்படி பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளை பரிசோதித்து, பாதிப்பு உள்ள நபர்களை தனிமைப்படுத்துவதற்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் தொற்று நோய் மருத்துவமனையிலும், படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமை வார்டுகளை அமைத்து சிகிச்சை அளிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய இந்நோய் தொற்று கொண்ட நபர்களிடமிருந்து ஆய்வக பரிசோதனைக்காக சுவாசக் குழாய் திசு மற்றும் தொண்டைக் குழி திசு மாதிரிகள் எடுத்து டெல்லியிலுள்ள தேசிய தொற்று நோய் சிகிச்சை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட சுகாதார மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பன்றிகளை மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், போதுமான அளவு மருந்துகள் (டாமிப்ளூ) இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சை அளிப்பதன் மூலம், இந்நோய் பரவாமல் தடுப்பதுடன் உயிர் இழப்பையும் தவிர்க்கலாம்.
இந்தியாவின் தட்ப வெப்ப நிலையினாலும் இந்த வைரஸ் கிருமி இந்தியாவில் பரவ அவ்வளவாக வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications