சரணடையும் புலிகளுக்கு பொது மன்னிப்பு-இலங்கை
கொழும்பு: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் விடுதலை புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் உள்ளிட்டோருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என அறிவித்துள்ளது.
இலங்கையில் ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலியாகி வருகிறார்கள். இந்நிலையில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வெறும் 5 சதுர கி.மீ., பரப்புக்குள் வசித்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஆனால், ராணுவம் அப்பகுதியில் 20 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே இருப்பதாக கூறுகிறது. இந்நிலையில் ராணுவம் முதலியார் குளம், கொக்கவில் போன்ற பகுதிகளில் விமானத்தில் இருந்து வீசப்படும் 9 குண்டுகளை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து விடுதலை புலிகள் வசம் 1 விமானம் மீதமுள்ளது என்ற செய்தி கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
என்றாலும் அவர்களிடம் தற்போது எந்த விமானமும் இல்லை. அவர்களிடம் விமானம் இருப்பதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை மனித உரிமைகள் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறுகையில்,
விடுதலை புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான விதிகளை உருவாக்க அட்டார்னி ஜெனரலுடன் பேசி வருகிறேன். அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தயாராக இருக்கிறோம்.
இது இதற்கு முன் குற்றம்சாட்டப்பட்ட மற்றும் தண்டனை அளிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு பொருந்தாது. அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் தொடரும்.
வன்னியில் இருக்கும் முகாம்களுக்குள் அப்பாவி தமிழர்களுடன் இணைந்து விடுதலை புலிகளும் வந்துள்ளனர். எத்தனை பேர் வந்துள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சிலர் தாங்கள் விடுதலை புலிகள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் புலிகள் மக்களுடன் வந்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம் என்றார் சமரசிங்கே.












Click it and Unblock the Notifications