சோனியா வரும் நாள் துக்க நாள்: பாரதிராஜா

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்திற்கு வரக் கூடாது. அதை தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது. அவர் வரும் நாள் துக்க நாள். வீடுகளில் கருப்புத் துணிகளை கட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து தீவிரப் பிரசாரம் தொடங்கியுள்ளது.

நேற்று முதல் பிரசாரக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இங்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். பாரதிராஜா கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில்,

நான் எத்தனையோ சினிமா சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பேசி இருக்கிறேன். எழுத்தாளர்கள் கூட்டத்தில் பேசி இருக்கிறேன். ஆனால் அரசியல் மேடைகளில் பேசி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

என்னுடைய அப்பா, அம்மா என் குடும்பம் முழுவதும் காங்கிரஸ் குடும்பம். 1962, 67களில் காங்கிரஸ் கட்சிக்காக மேடை ஏறி பேசி இருக்கிறேன். அப்போது எதை எல்லாம் பேச வேண்டும் என்று ஒரு குறிப்பு தருவார்கள்.

நான் கேட்பேன் எல்லாம் பொய்யாக இருக்கிறதே என்று. அரசியல் என்றால் இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று பேச சொல்வார்கள். பிறகு எதற்கு பொய் சொல்லும் அரசியல், கலைத்தொழிலே போதும் என்று அரசியலை விட்டு வட்டேன். அன்று பொய் பேச வேண்டாம் என்று அரசியலை விட்டேன். இப்போது மெய் பேச வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேச வந்திருக்கிறேன். என்னை இழுத்து வந்து விட்டார்கள்.

டெல்லி அரசு எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது. பத்மஸ்ரீ பாரதிராஜாவா? தமிழன் பாரதிராஜாவா? என்ற கேள்வி வந்தபோது, தமிழன் பாரதிராஜா என்கிற பெருமை மட்டும் போதும் என்று முடிவு செய்தேன். தமிழன் என்பதற்கு இணையான வேறு பட்டமே கிடையாது.

இளங்கோவன் உடலில் ஓடுவது தமிழ் ரத்தமா...

பாரதிராஜா யார் என்று வயலார் ரவிக்கு தெரியுமா? என்கிறார் இளங்கோவன். அவருக்கு தெரியுமா? நானும் வயலார் ரவியும் 25 ஆண்டுகால நண்பர்கள் என்று.
முத்துக்குமாரை தெரியாது என்கிறார். முத்துக்குமாரை தெரியாமல் தமிழன் இருக்கலாமா? அவருக்கு ஓடுவது தமிழ் ரத்தமா?.

தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். நல்லவர்களை தேடிக்கொள்ளுங்கள். 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இப்போது புரட்சியை தொடங்கி இருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் தேர்தலில் அது பிரளயமாக மாறவேண்டும்.

ஓட்டு கேட்க சோனியா வரக்கூடாது. அப்படி அவர் 6ம் தேதி சென்னைக்கு வந்தால் மிக பலத்த எதிர்ப்பு காட்ட வேண்டும். தாய்மார்களே பொதுமக்களே நீங்கள் உங்கள் வீடுகளில் கறுப்பு துணியை கட்டுங்கள். சிறு கறுப்பு துணியை அணிந்து கொள்ளுங்கள். யாராவது கேட்டால் சோனியா வரும்நாள் எங்கள் துக்க நாள் என்று கூறுங்கள் என்றார் பாரதிராஜா.

ஜெ.வை வணங்குகிறேன்...

இயக்குநர் சீமான் பேசுகையில்,

தந்தை பெரியாருக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளிவந்து உள்ளேன். இன்னும் 10 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன்.

இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள ராணுவம். அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம், தலாய்லாமா நாட்டை பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது. அப்போது சீனாவுக்கு இறையாண்மை, ஒருமைப்பாடு இல்லையா?.

யாரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் தனி ஈழம்தான் தீர்வு என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். அவரை வணங்குகிறேன்.

நான் இப்போது இந்தியா உள்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம், நீங்கள் விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதமோ எந்த உதவி வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவர்களுக்கான தடையை மட்டும் நீக்கிவிடுங்கள். தனி ஈழம் மலர பிரபாகரன் நடவடிக்கை எடுப்பார்.

இந்தியாவில் மட்டும் விடுதலைப்புலிகளுக்கான தடை நீக்கப்பட்டு, எங்களை இலங்கைக்கு செல்ல அனுமதித்தால் 15 லட்சம் பேர் இலங்கை செல்ல தயாராக இருக்கிறார்கள். 10 நாட்களில் தமிழ் ஈழம் மலரும் என்றார் சீமான்.

இயக்குநர்கள் ஆர்.சுந்தரராஜன், கெளதமன் சிபி சந்தர், பாடலாசிரியர் அறிவுமதி, எழுத்தாளர் தேவிசந்திரா, தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் சிவா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு பேசினர்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+