கட்டாய ராணுவப் பயிற்சி, குடும்பக் கட்டுப்பாடு-வருண்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: முஸ்லீம்களை குறி வைத்து சஞ்சய் காந்தி முன்பு அறிமுகப்படுத்திய கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அவரது புதல்வர் வருண் காந்தி கூறியுள்ளார். மேலும் தமிழன், பிராமணர் என்று பிரித்துப் பேசாமல், இந்தியர் என்று நினைக்க பழக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சஞ்சய் காந்தி ஸ்டைலில் அதிரடி சர்ச்சை அரசியலை கையில் எடுத்துள்ளார் வருண் காந்தி. முதலில் பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக மிகக் கடுமையாக பேசி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றார்.

பின்னர் இப்படியெல்லாம் இனி பேச மாட்டேன் என எழுதிக் கொடுத்து விட்டு பரோலில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் லண்டனைச் சேர்ந்த டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தனது தந்தை சஞ்சய் காந்தி முன்பு டெல்லியில் அறிமுகப்படுத்திய கட்டாய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்திய மக்கள் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வருண் காந்தி அளித்துள்ள பேட்டியில், நமது நாடு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல தலைவர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. எனது தந்தையைப் போன்ற தலைவர்கள் யாரும் நமது நாட்டுக்குக் கிடைக்கவில்லை. நான் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்வேன் என நம்புகிறேன்.

அரசியல்தான் எனது முக்கிய எண்ணமாக ஆரம்பத்திலிருந்தே இருந்தது. எந்த அரசியல்வாதியாவது எனக்கு பதவி மீது ஆசை இல்லை என்று கூறினால் அது பொய் என்று அர்த்தம்.

அரசு ஊழியர்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதேபோல நாட்டு மக்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சித் திட்டமும் கொண்டு வரப்பட வேண்டும். அதுதான் இந்தியர்களை ஒரே நாட்டு மக்கள் என்ற உணர்வுடன் இணைக்க உதவி செய்யும். ஜாதி, மத பாகுபாடுகளைக் கடந்து நாம் ஒன்றுபட அது உதவும்.

நாம் தமிழர்கள் என்றோ, நாம் பிராமணர்கள் என்றோ நினைக்காமல், இந்தியர்கள் என்று நாம் நினைக்கப் பழக வேண்டும்.

நான் முஸ்லீம்களை மிரட்டும் வகையில் எங்கேயும், எப்போதும் பேசவில்லை. நம் நாட்டு மக்களை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்ற நான் உறுதி பூண்டுள்ளேன் என்றார்.

அது என்ன குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்...

1970களில் சஞ்சய் காந்தி கொண்டு வந்த திட்டம் இது. ஆனால் இது முஸ்லீம்களை மனதில் வைத்துக் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின்படி அரசு ஊழியர்கள், போலீஸார் கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள பணிக்கப்பட்டனர். ஆண்கள் மட்டுமல்லாது பெண்களுக்கும் இந்தத் திட்டத்தை விஸ்தரித்தார் சஞ்சய் காந்தி.

இந்த அறுவைச் சிகிச்சை எல்லாம் முஸ்லீம்கள் அதிகம் உள்ள டெல்லி, துர்க்மேன் கேட் பகுதியில் நடத்தப்பட்டது என்பதுதான் முக்கியமானது. அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக இந்தத் திட்டத்தை கொண்டு வந்தார் சஞ்சய் காந்தி.

2 குழந்தைகள் இருக்கும் ஆண் அரசு அதிகாரிகளுக்கு இந்த அறுவைச் சிகிச்சை கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் என அப்போதைய காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. ஆனால் கல்யாணமாகாத ஆண்களையும் பிடித்து அறுவைச் சிகிச்சை செய்தனர், சஞ்சய் காந்தியின் நிர்ப்பந்தத்தின் பேரில். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த திட்டத்தைத்தான் இப்போது மகன் வருண் காந்தி பரிந்துரைத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து:

இதற்கிடையே, வருண் காந்தி மீது மாயாவதி அரசு தொடுத்த தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்தாகியுள்ளது. இச்சட்டத்தின் கீழ் வருணைக் கைது செய்தது செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அட்வைசரி குழு தீர்ப்பளித்துள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் கைதான வருண் காந்தி தற்போது பரோலில் இருக்கிறார்.

வருண் காந்தியை இந்த சட்டத்தில் கைது செய்தது பற்றி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மாநில அறிவுரை குழு நேற்று விசாரித்தது.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் மாநில அரசு தன் மீது இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதாக வருண் தெரிவித்தார். வருணுக்கு எதிராக பிலிபித் மாவட்ட கலெக்டர் கொடுத்த ஆதாரங்களில் அறிவுரைக்குழு திருப்தி அடையவில்லை.

இதனால், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருண் காந்தியை கைது செய்தது செல்லாது என்று அறிவுரைக்குழு தீர்ப்பளித்தது.

இதை வருண் காந்தி வரவேற்றுள்ளார். தன்னை 20 நாட்கள் தவறாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து காவலில் வைத்ததற்கு மத்திய அரசும், மாநில அரசும் பதில் சொல்ல வேண்டும் என்றார் அவர்.

ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக உ.பி. அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+