பாக். ராணுவ தாக்குதல் தீவிரம்-700 தலிபான்கள் பலி
இஸ்லாமாபாத்: தலிபான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் 700 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தின் பெரும் பகுதிகளில் தலிபான்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ஸ்வாட் பள்ளத்தாக்கில் அவர்கள் கொடி உயரப் பறக்கிறது.
அத்தோடு நில்லாமல் பாகிஸ்தானையே சுற்றி வளைக்கும் நோக்கோடு அவர்கள் செயல்படத் தொடங்கினர். சமீபத்தில், தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நூற்றுக்கணக்கான தலிபான்கள் வாகனங்களில் கிளம்பினர்.
இதை ஆரம்பத்தில் பாகிஸ்தான் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து இப்போது தலிபான்கள் மீது ராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது பாகிஸ்தான் அரசு.
வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தலிபான்களை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் 700 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தின் தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் அனைவரும் ஒழிக்கப்படுவர். கடைசி தீவிரவாதி கொல்லப்படும் வரை தாக்குதல் தொடரும் என்றார்.
சண்டை நடந்து வரும் பகுதியிலிருந்து இதுவரை 2 லட்சத்து 96 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவும் சேர்ந்துதான் தலிபான்களை வளர்த்து விட்டதாக அதிபர் ஆசிப் அலி சர்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கை நல்ல பலனை கொடுத்து உள்ளது. விரைவில் அவர்களை ஒடுக்கி விடுவோம். மீண்டும் தீவிரவாதிகள் ஒன்று கூடுவதை தடுப்போம்.
பாகிஸ்தானில் மத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை தீவிரவாதிகளாக மாற்றுவது அதிகரித்து வருகிறது. எனவே இனி பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்.
அனைத்து மத பள்ளிகளையும் அரசே ஏற்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தீவிரவாதிகள் உருவாவது தடுக்கப்படும்.
நாட்டின் எந்த பகுதியையும் யாருடைய கட்டுப்பாட்டிலும் விடமாட்டோம் எல்லாவற்றையும் அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்த சக்தியையும் தடுக்கும் ஆற்றல் அரசுக்கு உள்ளது. நாட்டின் இறையாண்மையை காப்பாற்றும் பொறுப்பு அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications