தமிழகத்தில் எந்த அணிக்கும் 'க்ளீன் ஸ்வீப்' கிடைக்காது?

சென்னை: இந்தியா பூராவும் தேர்தல் முடிவுகள் பிளவுபட்டதாக இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் ஒரே அணிக்கே பெருவாரியான சீட்களை கொடுப்பது மக்கள் வழக்கம். ஆனால் இது இந்த தேர்தலில் மாறக் கூடும் எனத் தெரிகிறது.
திமுக அணி மீது தமிழகம் முழுவதும் அதிருப்தி, கோபம், விரக்தி, எதிர்ப்பு, எரிச்சல் இருப்பது உண்மைதான். ஆனால் அது முழு அளவில் இருக்கிறது என்று சொல்ல முடியாது.
அதேபோல அதிமுக அணிக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு காணப்படுவது உண்மைதான். ஆனால் ஒரேயடியாக அதிமுக அணிக்கு ஆதரவாக அலை வீசுகிறது என்றும் கூறி விட முடியாது.
தேமுதிகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்காது என்ற பொதுவான கருத்து நிலவுவது உண்மைதான். ஆனால் மற்ற கட்சிகளுக்குக் கிடைக்கக் கூடிய பல சீட்களை பிரித்து மேயும் அளவுக்கு அந்த கட்சிக்கு பலம் இருப்பதையும் மறந்து விட முடியாது.
தற்போதை நிலவரப்படி திமுக அணியை விட அதிமுக அணியின் கை சற்று ஓங்கியே இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள்.
முதல் காரணம், அதிமுக அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். கடந்த சட்டசபைத் தேர்தலில் யாரெல்லாம் அதிமுகவை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது அன்புச் சகோதரி ஜெயலலிதாவுடன் இணைந்துள்ளனர்.
பாமக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் என வலுவான நான்கு கட்சிகள் இப்போது அதிமுக வசம் உள்ளன.
அடுத்து, விலைவாசிப் பிரச்சினை, மின்சார வெட்டு உள்ளிட்ட பல அடிப்படைப் பிரச்சினைகளில் தமிழக அரசு மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி இந்த அணிக்கு வாக்குகளாகப் போய்ச் சேரும் என்ற நம்பிக்கை.
3வதாக இலங்கைப் பிரச்சினை. இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கைப் பிரச்சினை இம்முறை தமிழக தேர்தல் களத்தில் மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது தேர்தல் பிரச்சினையே அல்ல என்று முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் கூறினாலும் கூட இதுதான் இன்று மிக முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.
அடுத்து தேமுதிக. இவர்களால் ஒரு சீட் வெல்ல முடிந்தால் அது மிகப் பெரிய சாதனை. ஆனால் இவர்கள் ஏற்படுத்தப் போகும் சோதனையை நினைத்து திமுகவைவிட அதிமுக கூட்டணி தான் பெரும் கவலையில் உள்ளது.
காரணம், தேமுதிகவினர் வாங்கும் வாக்குகள் எல்லாமே ஆளும் கட்சிக்கு எதிரானவே, அதிமுகவுக்கு போக வேண்டியவை. ஆனால், அதை தேமுதிக சுருட்டுவதால் அதிமுக எரிச்சலில் உள்ளது.
தென் மாவட்டங்களில் திமுக, அதிமுகவின் வாக்குகளையும், வடக்கில் பாமகவினரின் வாக்கு வங்கியையும் தேமுதிக பஞ்சர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் தோல்வி அடையவும் தொங்கு சட்டசபை உருவாகவும் விஜயகாந்த் கட்சிதான் காரணம்.
சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு 8.33 சதவீத வாக்குகளைப் பெற்று அனைவரையும் அதிர வைத்தது தேமுதிக. இந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக அதிக வாக்குகளை வாங்கினால் அது அதிமுகவுக்கு பாதகமாகும். குறைவாக வாங்கினால் அதிமுகவுக்கு சாதகாகும்.
மறுபுறம் கடந்த முறை 40 தொகுதிகளையும் வென்றது திமுக கூட்டணி. ஆனால் இந்த முறை அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.
எத்தனை இடம் கிடைத்தாலும் திமுகவால் காங்கிரஸை விட்டு போக முடியாது. காரணம், காங்கிரஸின் தயவால்தான் தமிழகத்தில் ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறது திமுக.
தங்களுக்கு அதிகபட்சம் 15 இடங்கள் கிடைக்கலாம் என்று தான் திமுக கூட்டணியினரே நம்புகின்றனர்.
மத்திய சென்னையில் தயாநிதி மாறன், திருவண்ணாமலையில் டாக்டர் வேணுகோபால், மதுரையில் மு.க.அழகிரி ஆகியோருக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று திமுக நம்புகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை தேனி, திருப்பூர், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் உறுதியான வெற்றி கிடைக்கும் என நம்புகிறது.
பாமகவைப் பொறுத்தவரை அரக்கோணம், தர்மபுரியில் வெற்றி உறுதி என கூறப்படுகிறது.
விருதுநகரில் வைகோ வெல்வார்.
வட சென்னை, நாகப்பட்டணத்தில் சிபிஐக்கு வெற்றிக் கனி கிடைக்கலாம்.
கார்த்திக், சரத்குமாருடன் இணைந்து களம் கண்டுள்ள பாஜக கன்னியாகுமரியிலும், ராமநாதபுரம் தொகுதியை திருநாவுக்கரசர் மூலமும் கைப்பற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
காங்கிரஸின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருக்கும் என கூறப்படுகிறது. புதுச்சேரியில் அக்கட்சிக்கு எளிதில் வெற்றி கிடைத்து விடலாம்.
ஆனால் தமிழகத்தில் காங்கிரஸுக்கு சாதகமான தொகுதிகள் என்று எதையும் கூற முடியாத நிலை உள்ளது.
ப.சிதம்பரம், சிவகங்கையில் ராஜ கண்ணப்பனுடன் கடும் போட்டியில் உள்ளார். சேலத்தில் தங்கபாலுவை எளிதில் வெல்ல விட மாட்டார் அதிமுகவின் செம்மலை.
ஈரோட்டில் இளங்கோவனுக்கு கடும் போட்டியைக் கொடுக்கிறார் மதிமுகவின் கணேச மூர்த்தி. கடந்த முறை தோல்வி அடைந்த ஓ.எஸ்.மணியன் இந்த முறை மணிசங்கர அய்யரை தோற்கடிக்காமல் விட மாட்டேன் என உறுதியுடன் படு தீவிரம் காட்டினார்.
கடந்த முறை 16 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக இந்த முறை 21 தொகுதிகளில் நிற்கிறது. அதேசமயம் கடந்த முறை 33 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக இம்முறை 23 இடங்களில் மட்டுமே நிற்கிறது.
பாமக 7, மதிமுக 4, சிபிஐ, சிபிஎம் தலா 3 என அதிமுக அணியில் களம் காண்கின்றன தோழமைக் கட்சிகள்.
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ் 16, விடுதலைச் சிறுத்தைகள் 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒன்று என போட்டியிடுகின்றன.
தேமுதிக வழக்கம் போல 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
பாஜக 11 தொகுதிகளிலும், சரத்குமார் கட்சி 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கார்த்திக் விருதுநகரிலும், அவரது மகளிர் அணித் தலைவி பார்வதி தேனியிலும் போட்டியிடுகின்றனர்.
இம்முறை ஒரே அணிக்கே அத்தனை தொகுதிகளையும் தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்காமல், ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் என தமிழக மக்கள் பிரித்துக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளன.












Click it and Unblock the Notifications