பரிதாப நிலையில் சரத் பவார்-ஜோக்கரான லாலு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இன்று நடந்தது. அதில் கூட்டணிக் கட்சிகளுக்கான துறைகள் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை முதல்வர் கருணாநிதி முன்மொழிய, திரணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வழி மொழிந்தார்.
இந்தக் கூட்டத்தில் கருணாநிதி, மம்தா பானர்ஜி தவிர, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பிரதமர் மன்மோகன் சிங், மூத்த காங்கிரஸ் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், திமுக எம்பி தயாநிதி மாறன் உள்ளி்ட்டோர் பங்கேற்றனர்.
மேலும் எந்தக் கட்சிக்கு எந்தத் துறை வேண்டும் என்பது குறித்தும் இதில் பேசப்பட்டது. மேலும் அனைத்துக் கட்சிகளும் தங்களது ஆதரவுக் கடிதங்களையும் சோனியாவிடம் வழங்கின.
இதற்கிடையே இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்துறை அமைச்சராக ப.சிதம்பரத்தையே நீடிக்கச் செய்ய சோனியா விரும்புகிறார். ஆனால், அவர் வேறு துறைககு மாற விரும்புவதாகக் கூற்பபடுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சராக கமல் நாத் அல்லது சல்மான் குர்ஷித் நியமிக்கப்படலாம் என்கிறார்கள்.
பாதுகாப்புத்துறை அமைச்சராக ஆண்டனி நீடிப்பார் என்றும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.
பவாருக்கு ஒரு பதவி மட்டுமே..
இதற்கிடையே கடந்த முறை வேளாண்மைத்துறை கேபினட் அமைச்சர் பதவி மற்றும் விமானத்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஆகியவற்றைப் பெற்ற சரத் பவாரின் தேசியவாதக் கட்சிக்கு இம்முறை ஒரு கேபினட் பதவி தான் தர முடியும் என காங்கிரஸ் கூறிவிட்டது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே மூன்றாவது அணிக்குப் போனது, பல மாநிலங்களில் வேறு கட்சிகளுடன் இணைந்து காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்டது, பிரதமர் பதவிக்கு தன்னை முன்னிறுத்திக் கொண்டது என ஓவர் ஆட்டம் போட்டார் சரத் பவார்.
ஆனால், மகாராஷ்டிரத்தில் அவரது கட்சி 9 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் தான் 16 இடங்களில் வென்றுள்ளது. இதனால் பவாருக்கு பாடம் புகட்டும் வகையில் அவருக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவி தான் தர முடியும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
மேலும் 6 மாதங்களில் மகாராஷ்டிரத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கு வசதியாக பவாரை இப்போதே வெட்டிவிடவே ஒரு பதவி என்று கூறி வெறுப்பேற்றுவதாகத் தெரிகிறது.
லாலுவுக்கு பதவியில்லை..
இதற்கிடையே இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்துக்கு அழைக்கப்படாத ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட மாட்டாது என்று தெரிகிறது.
காங்கிரசுக்கு வெறும் 2 சீட் மட்டுமே தருவதாகக் கூறி அதை அவர்கள் ஏற்காததால் நான்காவது அணி என்று ஒன்றை ஆரம்பித்து வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்ற லாலுவின் நிலைமை பரிதாபமாகிவிட்டது.
ரயில்வே அமைச்சராக இருந்த அவருக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளித்து வந்தனர். நேற்று அந்த பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications