திமுகவுக்கு 2+1+4 அமைச்சர்கள்: தீர்வு ஏற்படுகிறது?

திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவிகளையும், ஒரு தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவியையும், 4 இணை அமைச்சர் பதவிகளும் வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளது.
திமுகவுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை ஆகிய கேபினட் பதவிகளையும், தனிப் பொறுப்புடன் கூடிய கனரக தொழில்துறை பதவியையும், சுகாதாரம், பெண்கள் நலம், ரயில்வே, சுற்றுலா ஆகிய இணையமைச்சர் பதவிகளையும் வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் பதவிகளையும், ராசாவுக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவியையும், மு.க.அழகிரி, கனிமொழி, ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோருக்கு இணையமைச்சர்களையும் தர முன் வந்துள்ளது காங்கிரஸ்.
இதில் தயாநிதிக்கு தகவல் தொழில்நுட்பமும், பாலுவுக்கு ரசாயனம் மற்றும் உரத்துறையும், ராசாவுக்கு கனரக தொழில்துறையும்,
அழகிரிக்கு நலத்துறை இணையமைச்சர் பதவியும், கனிமொழிக்கு பெண்கள்-சமூக நலத்துறை இணையமைச்சர் பதவியும், விஜயனுக்கு ரயில்வேதுறை இணையமைச்சர் பதவியும், ஜெகத்ரட்சகனுக்கு சுற்றுலாத்துறை இணையமைச்சர் பதவியையும் திமுக தரும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
கடந்த முறையும் திமுகவுக்கு 3 கேபினட் அமைச்சர்களும் 4 இணையமைச்சர்களும் இருந்தது நினைவுகூறத்தக்கது. ஆனால், இப்போது ஒரு கேபினட் குறைக்கப்பட்டு தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் என்ற பதவி தரப்படுகிறது.
அதே போல திமுக கோரியபடி ரயில்வே கேபினட் அமைச்சர் கிடைக்கவில்லை.
முன்னதாக இரு தரப்புக்கும் இடையே அமைச்சர்கள் எண்ணிக்கை, துறைகள் ஆகிய விஷயத்தில் கடும் மோதல் நடந்தது.
இதையடுத்து வெளியில் இருந்து ஆதரவு என்று கூறிவிட்டு டெல்லியிலிருந்து முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பினார்.
இதையடுத்து திமுகவிடம் காங்கிரஸ் புதிய பார்முலாவைத் தந்தது. அதன்படி திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர்கள் பிளஸ் 4 இணையமைச்சர் அல்லது 3 கேபினட் பிளஸ் 3 இணையமைச்சர் என்று புதிய பார்முலாவை முன் வைத்தது.
ஆனால் 4 கேபினட், 4 இணையமைச்சர்களைக் கேட்ட திமுகவும் இறங்கி வந்தது. 3 கேபினட் அமைச்சர்கள், 4 இணையமைச்சர்கள் என்றால் ஓ.கே என்றது.
ஆனால், 2 கேபினட், 1 தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் மற்றும் 4 இணையமைச்சர் என்ற புதிய கண்டிசனைப் போட்டது காங்கிரஸ். இது விஷயமாக திமுக-காங்கிரஸ் இடையே இன்னும் சிக்கல் நிலவினாலும் மேலும் பேச்சு நடந்து வருகிறது.
இதனால், 3+4 அல்லது 2+1+4 என்ற அளவில் அமைச்சர் பதவிகள் முடிவாகிவிடும் என்று தெரிகிறது.
பாலு-ராசாவுக்கும் ஓகே..இறங்கி வந்த காங்:
அதேபோல பாலு, ராசாவை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும் தயார் என்றும் காங்கிரஸ் இறங்கி வந்தது. இதையடுத்து இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு விடும் என்று தெரிகிறது.
முன்னதாக முதல்வர் கருணாநிதியை சமாதானப்படுத்துவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்தை நாளை சென்னைக்கு அனுப்ப இருந்தது. ஆனால், அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
காலையில் சென்னை திரும்பும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,
நாங்கள் எங்களிடம் இருந்த பழைய இலாகாக்களையே கேட்டோம் (3 கேபினட், 4 இணையமைச்சர்). ஆனால், காங்கிரஸ் தரப்பில் வேறொரு திட்டம் கொடுக்கப்பட்டது. அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவு செய்யப்படும்.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவு தரும் என்றார்.
பிரதமர்-சோனியா சந்திப்பு:
முன்னதாக திமுக விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை சுமார் 2 மணிய நேரம் ஆலோசனை நடத்தினார்.
நேற்று இரவும் 11 மணி முதல் 12 மணி வரையும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து திமுக விவகாரத்தைத் தீர்க்க சோனியா முயன்றார். அப்போது அங்கிருந்தபடி பிரதமரும், சோனியாவும் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினர்.
ஆனால், பிரச்சனை தீராததால் இன்று காலையும் பிரதமரின் இல்லத்தில் வந்து சோனியா பேச்சு நடத்தினார். ஆனால், முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பிவிட்டதையடுத்து அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தொலைபேசியில் பேச்சு நடத்தினர்.
மேலும் பதவியேற்பு விழா நடந்தவுடன் நிருபர்களிடம் பேசிய பிரதமர், திமுக அமைச்சரவையில் சேர வேண்டும். கூட்டணியின் நிலையை உணர்ந்து அவர்கள் இணைவார்கள் என்று நம்புகிறேன்.
ராகுல் காந்தியையும் அமைச்சரவையில் சேர்க்க முயன்றேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார் என்றார்.
கேபினட்டுக்குப் பதில் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் என்பதை திமுக ஏற்றால் சமரசம் ஏற்பட்டு விடும் என்று தெரிகிறது. இது தொடர்பாக நாளை கூட்டப்படும் செயற்குழுவில் திமுக விவாதித்து முடிவை அறிவிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications