ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய தருணம்-செல்வராசா

பிரபாகரன் மரணம் குறித்து செல்வராசா பத்மநாதன் முரண்பாடான அறிக்கைகை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. அவதூறு பிரசாரங்களும், தவறான செய்திகளும் அதற்கு இடையூறாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கள யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என கூறியுள்ளார் பத்மநாதன்.
பத்மநாதன் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசாங்கமும் அதன் சிங்கள ராணுவமும் தமிழீழ மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள மனிதப் பேரவலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து நிர்க்கதியாக்கி இடம்பெயர்த்து அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள ராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27.05.09) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில், வன்னியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நியாயம் வழக்கத் தவறியதற்காக எமது கவலையையும், கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.
ராணுவ மேலாதிக்க நிலையின் ஊடாக தாயகத்து மக்களின் வாழ்வு உரிமையினைப் பறித்த இலங்கை அரசு, தற்போது ராஜதந்திர வழிமுறைகளைக் கொண்டு உலக அரங்கில் நமது மக்கள்மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளது.
தனக்கு துணையாக அனைத்துலக சக்திகளுடன் இணைந்து ராஜதந்திர செயற்பாடுகளின் மூலமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்த்து எறிவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.
அதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களையும் உதவிகளையும் திரட்டுவதில் இலங்கை அரசு கொள்கையளவில் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வளங்களைக் கொண்டு புனர்வாழ்வு, புனரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் நலனில் சிங்கள அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக காட்டி, தான் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு பழியில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வழி தேடுகின்றது.
தனது ராணுவ படைகளால் கட்டுப்படுத்தப்படும் பொது நிர்வாக இயந்திரத்தின் கீழ் நிவாரணம் மற்றும் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தின் இனத்துவ சமநிலையினை சிங்கள மக்களின் பெரும்பான்மைக்கு சார்பாக மாற்ற முனைவதோடு தமிழ் மக்களின் சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை தற்சார்பு நிலையற்றதும் இலங்கையின் தென்பகுதியினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான பொருளாதாரமாக மாற்றுவதற்குரிய திட்டங்களையும் அது மேற்கொண்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் சிங்கள அரசாங்கம் குறியாகவுள்ளது.
இத்தகைய சவால்களை எதிர்கொண்டு தாயகத்தில் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்கும், தடுப்பு முகாம்களிலும் சிறைகளுக்குள்ளும் சித்திரவதைக் கூடங்களிலும் நிரப்பப்பட்டுள்ள நம் மக்களை விடுவித்து செழுமையும் சமாதானமும் நிறைந்ததாக அவர்கள் வாழ்வினை கட்டியெழுப்புவதற்கும் செயற்படவேண்டியது நமது தேசியப்பணியாகும்.
கள யதார்த்தத்தின் அடிப்படையிலும் மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற் கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் மூலமாக போராட உறுதி பூண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் ஒற்றுமையினையும் அவர்களின் அளப்பரிய ஆற்றல்களையும் அவர்களால் புலம்பெயர் தேசங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நன்மதிப்பினையுமே தங்கள் ஆயுதங்களாக கையில் எடுத்துள்ளனர்.
இன்று நம் முன்னே பெரும் தேசியக் கடமை காத்துக் கிடக்கின்றது. நாம் மிகவும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
இக்கடமையினை முழுமையான பலத்துடனும் சிறப்புடனும் நிறைவேற்றுவதற்கு அவதூறு பிரச்சாரங்களும், வதந்திகளும், தவறான செய்திகளும் இடையூறானவை.
இவற்றைப் புறம் தள்ளி நமது தாயகத்திற்கும் மக்களுக்குமான நமது கடமைகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்வோம் என தெரிவித்துள்ளார் செல்வராசா பத்மநாதன்.












Click it and Unblock the Notifications