தமிழர்கள் இறந்தால் ஐ.நா தான் பொறுப்பு-இலங்கை
கொழும்பு: இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாம்களில் யாரேனும் பட்டினியால் உயிரிழந்தால் அதற்கு ஐ.நா. தான் பொறுப்பேற்க வேண்டும். இலங்கை அரசு அதற்குப் பொறுப்பேற்க முடியாது என்று பொறுப்பே இல்லாமல் பேசியுள்ளார் இலங்கை மனித உரிமை துறை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே.
இதுகுறித்து சமரசிங்கே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வவுனியாவில் உள்ள அகதிகளை முடிந்தவரை விரைவாக மறு குடியமர்த்தவே முயற்சி செய்கிறோம். அதுவரைக்கும் தமிழ் மக்களை நல்ல முறையில் கவனிக்கின்றோம். குறிப்பாக ஐ.நாவை விடவும் நாங்கள்தான் இந்த மக்களை நல்ல முறையில் கவனிக்கின்றோம்.
ஐ.நா. இம்மக்களுக்கு கூடாரங்களை வழங்குகின்றது. நாங்கள் வீடுகளை வழங்குகின்றோம். இந்தக் கூடாரங்களை வழங்காது வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு நாங்கள் பல தடவை ஐ.நாவிடம் கேட்டிருந்தோம். வீடுகள் கொடுத்தால் அது நிரந்தர வசிப்பிடமாகி விடும் என்று ஐ.நா. கூறுகின்றது.
பணத்தட்டுப்பாடு எதுவும் ஐ.நாவுக்குக் கிடையாது. பணத்தை அச்சடிக்க வேண்டிய தேவையும் ஐ.நாவுக்கு இல்லை. அந்த அமைப்பு பல நாடுகளிடமிருந்து பணத்தைப் பெறுகின்றது. அப்படியான நிலையில் இந்த மக்களை நல்ல முறையில் கவனிக்கலாம்.
அகதி முகாம்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகின்றது என்று குற்றம் சாட்டப்படுகின்றது. அப்படி உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினியால் மரணித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. உலக உணவுத் திட்டமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். அந்த அமைப்புத்தான் உணவுக்கான பொறுப்பை ஏற்றுச் செயற்படுகின்றது என்று கூறியுள்ளார் சமரசிங்கே.












Click it and Unblock the Notifications