கருணாநிதி எங்களுக்கு உபதேசமா?-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பலவீனமாகும்போதெல்லாம் மாநில சுயாட்சி கோஷத்தையும், இந்தி எதிர்ப்பு முழக்கத்தையும் கருணாநிதி கையில் எடுத்துக் கொள்வார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மூலம் தமிழர்கள் அனைவரும் வெட்கப்பட்டு தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக பெற்ற வெற்றியானது விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்று பல்வேறு பத்திரிகைகளும் கருத்து தெரிவித்துள்ளன.

இந்தத் தேர்தலே போலியான தேர்தல் என்று பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றின் ஆசிரியரே கட்டுரை எழுதும் அளவிற்கு மிக மோசமாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைவிட தலைகுனிவு என்னவென்றால், தேர்தல் மூலம் தமிழக மக்கள் ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது தான்.

இலங்கையில் நடந்த இன அழிப்புப் போருக்கு ஆதரவாக தேர்தலில் மக்கள் தீர்ப்பு அமைந்ததாக ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இதனால் தமிழக தமிழர்களுக்கு மட்டுமன்றி உலக தமிழர்கள் அனைவருக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் கருணாநிதி இப்போது மீண்டும் மாநில சுயாட்சி முழக்கத்தை கையில் எடுத்துள்ளார். திமுக எப்போதெல்லாம் பலவீனம் அடைகிறதோ, அப்போதெல்லாம் மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு பிரச்சனைகளை கருணாநிதி கையில் எடுத்துக் கொள்வார்.

மத்திய ஆட்சியில் முன்பு தாம் பெற்றதைபோல, நினைத்த துறைகளை பெற முடியாததாலும், தாம் விரும்பியவர்களுக்கு அமைச்சர் பதவியை பெற்றுத்தர முடியாததாலும், 2004ம் ஆண்டில் இருந்ததைவிட, தற்போது திமுக பலவீனமாகி விட்டதே என்ற பயத்தில் கருணாநிதி மீண்டும் மாநில சுயாட்சி முழக்கத்தை கிளப்பியிருக்கிறார்.

2004ம் ஆண்டு நாங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்ற போது, குறைந்தபட்ச செயல் திட்டம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை. இந்த நிலையில் தான் கருணாநிதி மாநில சுயாட்சி முழக்கத்தை எழுப்பியுள்ளார். இவரது மனசாட்சி என்று கூறப்பட்ட மறைந்த முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி புத்தகத்தை தலையணைக்கு கீழே வைத்து படுத்துக் கொண்டாலே அது கிடைத்துவிடும் போலும்.

அந்த புத்தகத்தை வெளியிட்டதை தவிர, 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இதுவரை மாநில சுயாட்சிக்காக எதையும் செய்ததில்லை.

தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்து சரியானது.

இலங்கை போரின் இறுதியில் ஒரே நாளில் 20,000தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து கருணாநிதி மெளனம் சாதித்து வருகிறார்.

இந்திய அதிகாரிகள் சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன் மற்றும் ஐ.நாவின் சிறப்பு செயலாளர் விஜய் நம்பியார் ஆகியோர் அவ்வப்போது இலங்கை சென்று வந்தது போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அல்ல, போரை ஊக்கப்படுத்தி இலங்கை அரசை பாராட்டுவதற்காகவே அவர்கள் சென்று வந்ததாக லண்டனில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகையாளர் ரிட்சர்ட் டிக்சன் எழுதியுள்ளார்.

இதே கருத்தை நான், வைகோ, நெடுமாறன் போன்றோர் தெரிவித்து வந்தோம். தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நாவோ, இந்திய அதிகாரிகளோ விளக்கம் அளிக்கவில்லை. இது தொடர்பாக நான் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.

இவற்றில் எல்லாம் கருணாநிதிக்கு அக்கறையில்லை. இலங்கை தமிழர்களின் நலன் காக்க இந்திய அரசோ, தமிழக அரசோ எதுவும் செய்யாது. இந்த விஷயத்தில் மேலை நாடுகள் தலையிட்டுதான் அங்கு அமைதியான தீர்வை கொண்டு வர முடியும்.

தேர்தலில் பலவேறு முறைகேடுகள் நடைபெற்றன. இதைக் கூறினால் தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை எதிர்க்கட்சிகள் ஆராய்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி எங்களுக்கு உபதேசம் செய்கிறார்.

ஆனால் அவர் அப்படி நடந்து கொண்டதில்லை. எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது, இடி அமீன் ஆட்சியில் இடைத்தேர்தலே தேவையில்லை என்று கூறியவர் தான் கருணாநிதி.

வயதாகி விட்டதால் தன்னுடைய மகனை துணை முதல்வராக்கியிருக்கிறார். இது எல்லோரும் எதிர்பார்த்தது தான். அனுபவம் வாய்ந்த 5 முறை முதலமைச்சரான கருணாநிதியே தமிழகத்தை இந்தியாவில் 14வது இடத்திற்கு தான் கொண்டு செல்ல முடிந்தது.

ஆனால், எந்த திறமையும் இல்லாத ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெறும் தகவல் தெரிவிக்கும் எந்திரமாக மட்டும் உள்ளார். தேர்தல் முறைகேடு செய்தவர்களுக்கு எதிராக அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+