சட்டசபையில் அதிமுக 2 முறை வெளிநடப்பு-ஸ்டாலினை பாராட்டி பேசிய எஸ்.வி.சேகரால் அமளி

ஆனால் அதிமுக எம்எல்ஏவான நடிகர் எஸ்.வி.சேகர் மட்டும் வெளிநடப்பு செய்யவில்லை. மாறாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிப் பேச அவருக்கு அனுமதி தரப்பட்டது.
இதையடுத்து திமுதிமுவென மீண்டும் உள்ளே புகுந்த அதிமுகவினர், சேகருக்கு பேச அனுமதி தந்ததற்கு கடும் ஆட்சேபனை எழுப்பி பின்னர் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் பிப்ரவரி 17ல் தொடங்கி 27ம் தேதி வரை நடந்தது. அப்போது பட்ஜெட் தாக்கலானது. பின்னர் விவாதம் தொடங்கியது. இருப்பினும், லோக்சபா தேர்தல் காரணமாக குறுகிய காலமே இந்தக் கூட்டத் தொடர் நடந்தது.
இதையடுத்து இன்று மீண்டும் சட்டசபை கூடியது. ஜூலை 21ம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் குறிப்பை சபாநாயகர் ஆவுடையப்பன் வாசித்தார்.
இதையடுத்து 2 நிமிடம் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நிதியமைச்சர் அன்பழகனை பேச அழைத்தார் சபாநாயகர். அவர் பேச எழுந்ததும், அதிமுக கூட்டணியைச் சேர்ந்த அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகியவற்றின் உறுப்பினர்கள் எழுந்து நின்று நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கோஷம் எழுப்பினர்.
சபாநாயகர் அவர்களை அமரக் கூறினார். ஆனால் யாரும் கேட்கவில்லை. அன்பழகன் பேசிய பின்னர் உங்களை பேச அனுமதிக்கிறேன் என்றார்.
இதை ஏற்காமல், அதிமுக கூட்டணிக் கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர். ஆனால் அதிமுகவைச் சேர்ந்த, அக்கட்சியின் தலைமையால் ஓரம் கட்டப்பட்டுள்ள எஸ்.வி.சேகர் மட்டும் வெளியேறாமல் அமர்ந்திருந்தார்.
ஸ்டாலினை பாராட்டிப் பேச சேகருக்கு வாய்ப்பு..
இந்த நிலையில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். அப்போது சேகரும் தனக்கு பேச வாய்ப்பளிக்குமாறு கோரினார். அதற்கு சபாநாயகரும் அனுமதி அளித்தார்.
இதையடுத்து எழுந்த எஸ்.வி.சேகர், மு.க.ஸ்டாலின் எனது நண்பர். அவர் துணை முதல்வராகியிருப்பதற்காக வாழ்த்துகிறேன். அரசியல் நாகரீகம் கருதியே வாழ்த்துகிறேன். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது என்றார்..
இதையடுத்து வெளியேறிய அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் உள்ளே வந்தனர்.
கட்சிக் கொறடா அனுமதி அளிக்காத நிலையில் சேகருக்கு எப்படி பேச வாய்ப்பளிக்கலாம் என்று சபாநாயகரை நோக்கி ஆவேசமாக கேட்டனர்.
இதனால் அமளி ஏற்பட்டது. யார் என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாக கேட்கவில்லை.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், மசோதா பற்றி பேசுவதற்குத்தான் உறுப்பினருக்கு அவர் சார்ந்த கட்சி அனுமதி அளிக்க வேண்டும். நல்ல இதயத்தோடு எஸ்.வி. சேகர் வாழ்த்தி பேசுகிறார். அதை சபாநாயகர் அனுமதிக்கலாம் என்றார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், ஒரு உறுப்பினர் வாழ்த்தி பேசுவதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் மொத்தமாக அமைச்சர்களைப் பார்த்து கோஷமிட்டனர். இதையடுத்து அனைத்தையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் அன்பழகன் எழுந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. ஆனால் அந்த கட்சி உறுப்பினர் எஸ்.வி.சேகர் வெளிநடப்பு செய்யவில்லை. அதிமுகவினர் இடையே கருத்து மாறுபாடு இருந்தால் வெளியே சென்றதும் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கலாம். சபாநாயகர் அனுமதி கொடுத்துள்ளார். இதனால் அவர் பேசுவதை தடுக்க உரிமை இல்லை என்றார்.
அமைச்சர் துரைமுருகன் எழுந்து, கடந்த ஆட்சியின் போது சிவகாமி, முருகவேல் ஆகியோர் பாமக உறுப்பினர்களாக இருந்தாலும் பாமகவிடம் அனுமதி பெற்று பேசுவது இல்லை. அன்றைய சபாநாயகர் காளிமுத்துவின் அனுமதியின் பேரில்தான் பேசுவார்கள். பாமகவினர் கேட்டால் அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அந்த மரபின்படி எஸ்.வி.சேகரை பேச அனுமதிக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு.
அப்போது அதிமுகவினர் எஸ்.வி. சேகரை பேச அனுமதி கூடாது என்று மீண்டும் குரல் எழுப்பினர்.
அப்போது சபாநாயகர், நீங்கள் அவையை விட்டு வெளியே போய் விட்டீர்கள். அதன் பிறகு அவர் பேச தொடங்கினார். எனவே அவரை பேசக் கூடாது என்று சொல்ல முடியாது. அது என் அதிகாரம். அவர் பேசிய பிறகு நீங்கள் உங்கள் கருத்தை சொல்லலாம்.
அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், அதிமுக உறுப்பினராக இருக்கும் எஸ்.வி.சேகர் எங்கள் அனுமதி பெற்றே பேசியிருக்க வேண்டும். பாமக உறுப்பினர்கள் பற்றி அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்று கூறிவிட்டு சில வார்த்தைகளைக் கூறினார். அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், அதிமுக எம்எல்ஏவான எஸ்.வி.சேகர் தனது பதவியை ராஜினாமா செய்யட்டும். மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்து பேசட்டும் என்றார்.
அப்போது இடைமறித்த சபாநாயகர், உங்கள் உள் கட்சி விவகாரத்தை அவைக்கு வெளியே போய் பேசுங்கள் என்றார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் எஸ்.வி.சேகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது எழுந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அதிமுக உறுப்பினரை அந்த கட்சிக்காரர்களே மிரட்டுகிறார்கள். அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பு. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் பதிலளித்தார்.
அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், கட்சி கொறடாவுக்கு உரிய அதிகாரத்தின்படி ஒரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கொறாடாவின் அனுமதி பெற்றுதான் பேச வேண்டும். அந்த அடிப்படையில்தான் கொறடா தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் என்றார்.
இதற்கு நிதியமைச்சர் அன்பழகன் பதிலளிக்கையில், தனது கட்சி உறுப்பினர் பேசத்தகாத வார்த்தை பேசி இருந்தால் அதை தலைவரோ, கொறடாவோ கேட்கலாம். ஆனால் சபாநாயகர் பேச அனுமதித்த பிறகு குறுக்கீட்டு பேச தலைவருக்கும், கொறடாவுக்கும் அனுமதி இல்லை என்றார்.
அப்போது எஸ்.வி.சேகர் மீண்டும் பேச எழுந்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். எஸ்.வி.சேகர் தொடர்ந்து பேசக் கூடாது என்று கூச்சலிட்டனர்.
அவையை நடத்த விடாமல் இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என சபாநாயகர் எச்சரிக்கை விடுக்கவே, மீண்டும் வெளிநடப்பு செய்வதாகக் கூறிவிட்டு அதிமுகவினர் வெளியேறினர்.
அதன் பிறகே எஸ்.வி.சேகரால் பேச முடிந்தது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications