அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 'நம்பர்-1'-பரிதி இளம்வழுதி
நெல்லை: மற்ற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் தமிழகத்துக்கு தான் முதலிடம் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் 13வது அரசு பொருட்காட்சி தொடக்கவிழா நடந்தது. சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் காமராஜ் வரவேற்றார்.
விழாவில் கலந்து கொண்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசுகையில்,
தமிழகத்தை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தலைநி்மிர செய்து முதல்வர் கருணாநிதி சாதனை படைத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளத்தான் பொருட்காட்சிகளை அரசு நடத்துகிறது. இந்த பொருட்காட்சி நெல்லை மாவட்டத்தின் 13வது பொருட்காட்சியாகும். தமிழகத்தில் 125வது பொருட்காட்சியாகும்.
அரசு பொருட்காட்சிகளின் மூலம் ரூ.21.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அளித்த 80 சதவீதம் வாக்குறுதிகளை 3 ஆண்டுகளில் தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.
இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முன்மாதிரி மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் தமிழகம்தான் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்த மாநிலமாக உள்ளது.
அதற்கு சிறந்த உள்கட்டமைப்பும், நிர்வாகமும்தான் காரணம் என தெரியவந்துள்ளது. சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய பள்ளி சீறார் கண்ணொளி காப்பு திட்டத்தை கேள்விப்பட்டு ஆந்திரா, கர்நாடக போன்ற கல்விதுறை அலுவலர்கள் அதற்கான வழிமுறைகளை தமிழக கல்விதுறையிடம் கேட்டுள்ளனர்.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 1 ரூபாய் அரிசி திட்டத்தை பின்பற்றி 3 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டத்தை கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய அரசியலுக்கு மட்டுமல்லாது இந்திய அரசின் திட்டங்களுக்கும் வழிகாட்டும் தலைவராக முதல்வர் திகழ்கிறார் என்றார் பரிதி இளம்வழுதி.












Click it and Unblock the Notifications