விதிகளை மீறி்க் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க முடிவு - சிஎம்டிஏ நோட்டீஸ்
சென்னை: விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் விக்ரம்கபூர் கூறுகையில்,
சென்னையில் வீடு கட்டுவதற்கோ, பெரிய கட்டிடங்களை கட்டுவதற்கோ சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் சிலர் அனுமதி என்று ஒரு திட்ட வரைபடத்தை அளித்து விட்டு கட்டிடம் கட்டும்போது அதை மீறி பெரிய கட்டிடங்களை கட்டி விடுகின்றனர்.
இது போன்று வரைமுறையை மீறி கட்டிய கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் முன்பு உடனடியாக இடிக்கப்படும். ஆனால் தற்போது முதலில் சீல் வைத்து விட்டு பின்னர் இடிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கொண்டிதோப்பு, அய்யா முதலி தெருவில் வரன்முறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
2007 ஜூலை 27-க்கு முன்பு வரன்முறை மீறி கட்டிய கட்டிடங்களை தற்போது இடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும், தமிழக அரசின் அவசர சட்டம் 2007-ன் மூலம் வரன்முறை மீறிய கட்டிடங்களை ஒரு ஆண்டிற்கு இடிக்காமல் காப்பதற்கு கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தின் மேல் தொடரப்பட்ட வழக்கு இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
அதனால் 2007 ஜூலை 27-ம் தேதிக்குப் பின் வரன் மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தற்போது இடிப்பதற்கு உண்டான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பெரிய கட்டிடங்களை இடிப்பதற்கு விதிமுறை மீறி கட்டிய உங்கள் கட்டிடங்களை ஏன் இடிக்க கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
அவர்களின் பதில் கிடைத்தவுடன் பதில் திருப்தியாக இல்லாமல் இருந்தால் கட்டிடங்களை சீல் வைத்து இடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திற்கு வரன்முறை மீறி இன்னொரு தளம் கட்டப்பட்டுள்ளது. அதை ஏன் இடிக்க கூடாது என்று விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. பதில் கிடைத்தவுடன் நாங்கள் மேல் நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார்.


Click it and Unblock the Notifications
