விபத்துக்குள்ளான ஏமன் விமானத்திலிருந்து ஒரு குழந்தை உயிருடன் மீட்பு

ஏமன் நாட்டின் ஏமானியா ஏர் என்ற அரசு நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் 310 ரக விமானம் 150 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில், காமரூஸ் அருகே விமானம் பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி விட்டது.
இதுகுறித்து காமரூஸ் நாட்டின் துணை அதிபர் இடி நதோயிம் கூறுகையில், விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதில் பயணம் செய்த யாரேனும் உயிருடன் உள்ளனரா என்பது சந்தேகம்தான்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்தது. மேல் விவரங்களை எதிர்நோக்கியிருக்கிறோம் என்றார்.
இந்த நிலையில் விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. தேடுதல் முயற்சியின் பலனாக ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து அந்தக் குழந்தை மீட்கப்பட்டுள்ளதாக காமரூஸ் அதிகாரி ரசிதா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், 3 பயணிகளின் உயிரற்ற உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிதைந்த பாகங்கள் சிலவும் சிக்கியுள்ளன. இருப்பினும் வேறு யாரும் உயிருடன் உள்ளார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. விமானத்தில் மொத்தம் 142 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் காமரூஸைச் சேர்ந்தவர்கள். பாரீஸிலிரு்நது அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். 66 பேர் பிரான்ஸ் குடிமக்கள்.
கிரான்ட் காமோரில் உள்ள மொரானி நகரில் விமானம் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் தரையிறங்கப் போவதற்கு முன்பு காற்று பலமாக வீசியதால் விமானம் நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்து விட்டதாக தெரிகிறது.
விபத்துக்குள்ளான இடத்தில் உள்ள கடல் பகுதியில் இறந்த உடல்கள் மிதக்க ஆரம்பித்துள்ளன.
விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகளை செய்வதற்காக பிரான்ஸ் அரசு பல்வேறு உதவிக் குழுக்களை காமரூஸுக்கு அனுப்பியுள்ளது.
விபத்து குறித்து பிரான்ஸ் அதிபர் சர்கோஸி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய ஏர்பஸ் 310 ரக விமானம் 19 ஆண்டுகளாக சேவையில் இருந்து வந்ததாகவும். இதுவரை 51 ஆயிரத்து 900 மணி நேரங்கள் அது பறந்துள்ளது.
காமரூஸ் ஒரு தீவு நாடாகும். கிரான்ட் காமோர், அஞ்சோன், மொஹேலி ஆகியவை 3 எரிமலைத் தீவுகளால் ஆனது. ஆப்பிரிக்க கண்டத்தில், நிலப் பகுதிக்கு அருகில், மொசாம்பிக் கால்வாய்ப் பகுதியில் உள்ளது இந்தத் தீவு.
சமீபத்தில்தான் அட்லான்டிக் கடலில் விழுந்து ஏர் பிரானஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 228 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்தியப் பெருங்கடலில் ஏமன் நாட்டு விமானம் விழுந்து 152 பேர் பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications